பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவுப் பொருட்கள் கொண்டுசென்ற வாகனங்கள் மீது ஏவுகணை தாக்குதல்

358 0

201609200858213329_air-strikes-hit-aid-trucks-near-aleppo-12-people-killed_secvpfபோர்நிறுத்த உடன்பாடு அமலில் இருக்கும் சிரியாவில் பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவுப் பொருட்கள் கொண்டுசென்ற நிவாரண வாகனங்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.போர்நிறுத்த உடன்பாடு அமலில் இருக்கும் சிரியாவில் பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவுப் பொருட்கள் கொண்டுசென்ற நிவாரண வாகனங்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில் அதிபர் ஹபீஸ் அல் ஆசாத் தொடர்ந்து 29 ஆண்டு காலம் ஆட்சி நடத்தினார்.

அவர் கடந்த 2000-ம் ஆண்டு மறைந்த பின்னர், அவரது மகனான பஷர் அல் ஆசாத் அதிகாரத்துக்கு வந்தார். 16 ஆண்டுகளுக்கு முன்னர் தேர்தல் நடந்தபோது எதிர்ப்பின்றி 99 சதவீத ஓட்டுக்களை கைப்பற்றி வெற்றி பெற்ற அவர், பின்னர் நடந்த தேர்தலிலும் அமோக வெற்றி பெற்றார்.

பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இதில், 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் உள்பட சுமார் மூன்று லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 80 லட்சம் மக்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி ஜோர்டான், மற்றும் லெபனான் உள்ளிட்ட பல அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த 3-6-2014 அன்று நடைபெற்றது. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் 73.42 சதவீதம் அளவுக்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் 88.7 சதவீதம் வாக்குகளை பெற்று பஷர் அல் ஆசாத் மீண்டும் வெற்றி பெற்றார். இதன் மூலம் சிரியாவின் அதிபராக தனது பதவியை மூன்றாவது முறையாக பஷர் அல் ஆசாத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்

இருப்பினும், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக மக்களும், மக்கள் ஆதரவு புரட்சிப்படையினரும் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிரியா அரசுக்கு ஆதரவாக ரஷியாவும், கிளர்ச்சியாளர்களுக்கு மறைமுக ஆதரவாக அமெரிக்காவும் உள்ள நிலையில் அரசுக்கும் எதிர்ப்பு குழுக்களுக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடந்தால்தான் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வரும் என்பதால் ஐக்கிய நாடுகள் சபையின் யோசனைப்படியும், அமெரிக்காவின் தலையீட்டினாலும் இருதரப்பினருக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அமெரிக்க, ரஷியா, ஈரான், ஜெர்மனி உள்ளிட்ட உலகின் பலமிக்க 17 நாடுகள் நடத்திய இந்த ஆலோசனை கூட்டத்தில் சிரியாவில் நிரந்தர அமைதி ஏற்பட அரசியல்ரீதியான தீர்வை முன்னெடுத்து செல்ல வசதியாக  சிரியா ராணுவம் மற்றும் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் தனிநபர் போராளி குழுக்கள் மற்றும் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கிளர்ச்சியாளர்கள், ஹெஜ்புல்லா இயக்கப் போராளிகள் மற்றும் ரஷியா ஆதரவுப் படைகள் உள்பட அனைத்து தரப்பினரும் வெள்ளைக் கொடியை ஏந்தி போரை கைவிட வேண்டும். இருதரப்பினரும் தங்கள்வசம் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் மக்களை விடுவிக்க வேண்டும் என இந்த பேச்சுவார்த்தையின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுக்கு மேற்கண்ட 17 நாடுகளும் ஒருமனதாக சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அங்கு தடைப்பட்டுள்ள மனிதநேய நிவாரண உதவிகளை உடனடியாக மேற்கொள்ளவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நிவாரண உதவிகள் மிக அவசரமாக தேவைப்படும் இடங்களிலும், போராளிகளால் கைப்பற்றப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கும் நிவாரண உதவிகளை அனுப்பும் பணிகள் தொடங்கின.

சிரியாவில் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிக்குள் போராளிகளை நுழையவிடாமல் ராணுவத்தினரும், போராளிகளின் ஆதிக்கத்தில் உள்ள இடங்களை அரசுப் படைகள் மீண்டும் ஆக்கிரமித்து விடாதபடி புரட்சிப் படையினரும் தாங்கள் கைப்பற்றிய இடங்களை சுற்றி அரண் அமைத்து காவல் காத்து வருகின்றனர்.

சிரியாவில் இருதரப்பினருக்கும் இடையில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தபின்னர் ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமையின் சார்பில் ஏராளமான உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டபோதும் அவை வெகுதொலைவில் உள்ள மக்களை சென்றடைவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அப்பகுதியில் கடுமையான உணவுப்பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஒரு கிலோ அரிசி சுமார் பதினைந்தாயிரம் ரூபாய்க்கு கள்ளச் சந்தையில் விற்கப்படுகிறது. சரியான உணவு சாப்பிடாததால் கைக்குழந்தைகளுக்கு பாலூட்டும் சக்திகூட இல்லாமல் இங்குள்ள பெண்கள் வேதனையில் வெம்பித் துடிகின்றனர்.

இதேபோல், குழந்தைகளுக்கான பால் மற்றும் சத்து பானங்கள் கிடைக்காததால் பல குழந்தைகள் பட்டினியால் செத்து வருகின்றன. இந்த பட்டினி மரணத்தை தவிர்ப்பதற்காக பல குழந்தைகள் ஆடு,மாடுகளுக்கான கால்நடை தீவனங்களை தின்று உயிர் வாழ்வதாகவும் நெஞ்சைப் பிழியும் செய்திகளை மேற்கத்திய ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

குழந்தைகள் உள்பட சுமார் 2 லட்சம் மக்கள் கொடூரமான உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள திறந்தவெளி அகதிகள் முகாம்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் சத்துக்குறைவால் சூம்பிய கன்னம், குழிவிழுந்த கண்கள் மற்றும் வீங்கிய வயிற்றோடு மரணத்தின் விளிம்பு நிலையில் இருப்பதாகவும் அந்த செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளது, கல்மனதையும் கரையவைக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்நிலையில், சிரியாவில் உள்ள பெருநகரங்களில் ஒன்றான அலெப்போ நகரில் பட்டினியால் வாடும் மக்களுக்கு ஐ.நா.சபையில் அனுப்பி வைக்கப்பட்ட கோதுமை மாவு மற்றும் மருந்து வகைகள் செம்பிறை தொண்டு நிறுவனம் சார்பில் நேற்று 18 வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன.

அங்கு வாழ்ந்துவரும் சுமார் 78 ஆயிரம் மக்களுக்கு இந்த பொருட்களை பகிர்ந்து அளிப்பதற்காக உரேம் அல் கப்ரா என்ற இடத்தில் உள்ள ஒரு கிட்டங்கியில் நிவாரணப் பொருட்களை இறக்கி வைத்து கொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வானில் பறந்துவந்த போர் விமானங்கள் ஐந்து ஏவுகணைகளை அந்த கிட்டங்கியின்மீது வீசின. இந்த தாக்குதலில் நிவாரணப் பொருட்களை ஏற்றிவந்த 18 லாரிகளும் தீக்கிரையாகின. கிட்டங்கி கட்டிடம் சேதம் அடைந்தது. செம்பிறை அமைப்பை சேர்ந்த 12 பேரும் பலியாகினர்.

ரஷியா அல்லது சிரியா நாட்டின் விமானப்படைகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என கருதப்படும் நிலையில், இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.