சென்னையில் நாளை திருமாவளவன் தலைமையில் நதிநீர் உரிமை பாதுகாப்பு மாநாடு

604 0

201609201116058105_tomorrow-thirumavalavan-leadership-water-rights-conference_secvpfவிடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நதிநீர் உரிமை பாதுகாப்பு மாநாடு நாளை சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடக்கிறது.விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நதிநீர் உரிமை பாதுகாப்பு மாநாடு நாளை (21-ந் தேதி) சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் மாலை 4 மணிக்கு நடக்கிறது.
மாநாட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர்கள் சிந்தனை செல்வன், துரை.ரவிக்குமார், பொருளாளர் முகமது யூசுப் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் இரா.முத்தரசன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ. கே. பாலகிருஷ்ணன், நீரியல் வல்லுனர் ஏ.சி.காமராஜ் ஆகியோர் நதிநீர் உரிமை குறித்து சிறப்புரையாற்றுகிறார்கள்.

முன்னதாக விவசாயிகள் பாதுகாப்பு இயக்க மாநில செயலாளர் அக்ரி. பசுமைவளவன் வரவேற்கிறார். முடிவில் விவசாய தொழிலாளர் விடுதலை இயக்கம் மாநில செயலாளர் வீரசெங்கோலன் நன்றி கூறுகிறார்.

மாநாட்டினை விடுதலை மாவட்ட செயலாளர்கள் ந.செல்லத்துரை, இரா.செல்வம், அம்பேத்வளவன், அன்புசெழியன், ரவிசங்கர், வி.கோ.ஆதவன் மற்றும் கவுரிசங்கர், ராஜ்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்துள்ளனர். மாலை 4 மணியளவில் புதுக்கோட்டை நீலம் கலைக்குழுவின் கிராமிய பல்சுவை நிகழ்ச்சி நடக்கிறது.

இதுகுறித்து திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-காவிரி மேற்பார்வை குழு தமிழகத்திற்கு மாபெரும் அநீதி இழைத்து விட்டது. நொடிக்கு 3000 கனஅடி தண்ணீர் 10 நாட்களுக்கு திறந்துவிட வேண்டும் என்று அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என கன்னட அமைப்பும், கர்நாடக அரசும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி 20-ந்தேதி வரையில் திறந்துவிட வேண்டிய தண்ணீரை திறந்துவிடாமல் உச்சநீதிமன்றத்தை அவமதித்து இருக்கிறது. கர்நாடக அரசின் இந்த போக்கை விடுதலை சிறுத்தை கண்டிக்கிறது. நாளை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடுத்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக அரசும் மேற்பார்வை குழுவும் இழைத்துள்ள அநீதியை உச்சநீதிமன்றத்தின் பார்வைக்கு தமிழக அரசு எடுத்து செல்ல வேண்டும்.

நதிநீர் உரிமை பாதுகாப்பு மாநாடு திட்டமிட்டப்படி நாளை நடக்கிறது. இதில் தோழமை கட்சி நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். தமிழ்நாடு பாலைவனம் ஆவதை தடுக்க தமிழர்கள் ஓரணியில் திரள வேண்டும் என அறைகூவல் விடுக்கும் வகையில் இந்த மாநாடு எனது தலைமையில் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.