அமெரிக்காவில் தனது குடியிருப்பு என தவறாக நினைத்து வேறு ஒருவரின் குடியிருப்புக்குள் புகுந்து அங்கிருந்தவரை பெண் காவலர் சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகர காவல் துறையில் பணிபுரிந்து வரும் பெண் காவலர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து தனது வீட்டிற்கு கிளம்பி உள்ளார். அவர் டல்லாஸ் நகர் அருகே குடியிருப்பு வளாகம் அமைந்த பகுதிக்கு சென்றார். ஆனால் தவறுதலாக போத்தம் ஷேம் ஜீன் (வயது 26) என்பவரது வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் பெண் போலீஸ் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் போத்தம் ஷேமை காவலர் சுட்டுள்ளார். இதில் ஷேம் உயிரிழந்து விட்டார்.
இதன்பின் தகவல் அறிந்து வந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபொழுது, எனது குடியிருப்பு என நினைத்து உள்ளே நுழைந்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தினை அடுத்து, பெண் காவலரின் ரத்தம் சேகரிக்கப்பட்டு மதுபானம் எதுவும் குடித்துள்ளாரா? என அறிவதற்காக சோதனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
பெண் போலீசின் இந்த கொடூர செயலைக் கண்டித்து காவல்துறை தலைமையகம் முன்பு ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.