அதிகார பகிர்வின் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு – அமைச்சர் மனோ

375 0

manoதேசிய இனப்பிரச்சினைக்கு அதிகார பகிர்வின் மூலம் தான் தீர்வு என்பதில் திட்டவட்டமான நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய சகவாழ்வு மேம்பாட்டிற்கான ஊடகவியலாளர்களுக்கான இரு நாள் செயலமர்வு நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
அந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு விசேட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்த நாட்டில் புதிய யுகத்தினை ஆரம்பித்துள்ளோம்.
மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தின் போது, அரசியல் மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட முடியாமல் இருந்தது.
கடந்த ஆட்சிக்காலத்தின் இறுதிக்கட்டத்தில் ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்கவோ, ஊடக மாநாடுகளை நடாத்தவோ முடியாமல் இருந்தது.

கடந்த காலங்களில் ஜனநாயகத்தினை வெளிப்படுத்த முடியாத நிலமை காணப்பட்டது.
துப்பாக்கிகள் குண்டுகள் எறிகணைகள், வன்முறைகள் மூலம் நடாத்திக்கொண்டிருந்தோம். தற்போது, துப்பாக்கிகள், குண்டுகள், வன்முறைகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம்.
கலந்துரையாடல்களின் மூலம் நாட்டில் சகவாழ்வினை கட்டியெழுப்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இனங்கள் மத்தியில் ஒற்றுமையினையும் ஐக்கியத்தினையும் ஏற்படுத்த மக்கள் மத்தியில் சமத்துவத்தினை ஏற்படுத்த வேண்டும்.
சமத்துவத்தினால் ஐக்கியத்தினை ஏற்படுத்த முனைகின்றோம். சமத்துவம் இல்லாவிடின், ஐக்கியத்தினை ஏற்படுத்த முடியாது. சமத்துவமில்லாமல் வரும் ஐக்கியம் ஆண்டானுக்கும் அடிமைக்கும் இடையே உள்ள ஐக்கியம் என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.