எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவி ஐக்கிய தேசிய கட்சிக்கே சொந்தமாகும்.முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் கனவு இன்று நிறைவேறினாலும் அது முழுமைப் பெறவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் 72 ஆவது வருட நிறைவு நிகழ்வு நேற்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் பிரதமர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
பல போராட்டங்களின் மத்தியில் ஐக்கிய தேசிய கட்சி 72 வருடங்களை கடந்துள்ளது. ஆகவே மஹிந்த தரப்பினர் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளும் போலியான போராட்டங்கள் ஒன்றும் எமக்கு சவாலானதல்ல. 2015 ஆம் ஆண்டில் இருந்தே கூட்டு எதிரணியினர் போராட்டங்களை மாத்திரமே மேற்கொண்டுள்ளனர். அதில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறவில்லை.
மக்கள் சக்தி என்ற பெயரில் மதுவினை வழங்கி மேற்கொண்ட போராட்டங்கள் ஜனநாயக போராட்டமாகி விடாது. நேற்று முன்தினம் இடம்பெற்ற போராட்டம் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது.பலர் வீதியில் மதுபோதையில் புரண்டுள்ளனர். அரசாங்கம் ஜனநாயக ரீதியில் போராட்டங்களை நடத்த அனுமதி அளித்துள்ளது. போராட்டங்களின் பொழுது பலர் அநாகரிகமாக செயற்பட்டுள்ளமையினை சமூக வலைத்தளங்களில் காணக்கூடியதாக உள்ளது.
தேசிய அரசாங்கத்தின் சிறந்த கொள்கையின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் கனவுகள் பாரியளவில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அது முழுமை பெறவில்லை. அவரது கனவு முழுமை பெற வேண்டுமாயின் ஐக்கிய தேசிய கட்சியினர் அரச பலம் பொருந்தியவர்களாக தோற்றம் பெற வேண்டும். ஆகவே இவரது கனவு வெகுவிரைவில் நனவாக்கப்படும். 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவி எமக்கே சொந்தமாகும் என்றார்.