வேறு எந்த நாட்டின் ராணுவமும் பாகிஸ்தான் ராணுவத்தை போன்று பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டதில்லை என அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
கடந்த 1965-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போரை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செடம்பர் 6-ம் தேதியை பாதுகாப்பு தினமாக பாகிஸ்தான் அரசு கடைபிடித்து வருகிறது. பின்னர் இதன் பெயரை பாதுகாப்பு மற்றும் தியாகிகள் தின விழாவாக கடந்த 2014-ம் ஆண்டு மாற்றியது.
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான பாதுகாப்பு மற்றும் தியாகிகள் தின விழா, ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமையிடத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில், பாராளுமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைஞர்கள் பலர் பங்கேற்றனர்.
இதில் கலந்துகொண்டு பிரதமர் இம்ரான் கான் உரையாற்றினார். அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :–
வருங்காலத்தில் பிற நாடுகளில் நடக்கும் போரில் பாகிஸ்தான் ராணுவம் பங்கேற்காது, ஆரம்பம் முதலே இந்த போருக்கு எதிரான நிலைப்பாட்டையே நான் எடுத்துள்ளேன். பயங்கரவாதத்திற்கு எதிராக நமது ராணுவம் எடுத்துள்ள நடவடிக்கைகள் பாரட்டத்தக்கது.
உலகில் வேறு எந்த நாடும் பாகிஸ்தான் ராணுவத்தை போன்று பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டதில்லை. இந்த போரினால் 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டும், காயமடைந்தும் உள்ளனர். மேலும், மனித இழப்புக்களை விடவும் பாகிஸ்தான் சந்தித்த பொருளாதார இழப்புக்களும், அதனால் ஏற்பட்ட கடன் சுமைகளும் தான் அதிகம்.
இனி நமது வெளியுறவுக் கொள்கைகளில் தேசத்தின் நலனே பிரதானமாக இருக்கும். நாம் செல்வ செழிப்பு மிக்க கனிமவளங்களை வைத்துளோம், வேறுபாடுகள் நிறைந்த நிலப்பகுதி மற்றும் நான்கு பருவங்களை நாம் கொண்டுள்ளோம், இவற்றை எல்லாம் முறையாக பயன்படுத்தி நமது நாட்டை வளமாக்க வேண்டும்.
மனித வளத்துறையில் நாம் முதலீடு செய்வது அவசியமாகும், எனவே அனைத்து குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும், மருத்துவமனைகளின் எண்ணிக்கையை பெருக்கி உலகின் முதல் இஸ்லாமிய பிரதேசமான மெக்காவை போன்றே இனி நாட்டில் அனைவரும் சரிசமமாக நடத்தப்படுவார்கள்.
பாகிஸ்தான் அமைதி வழியில் நம்பிக்கை கொண்டுள்ளது. அண்டை நாடுகள் மற்றும் உலக நாடுகளுடன் சமமான பரஸ்பர ஒத்துழைப்பை ஊக்குவிக்கவே நாங்கள் விரும்புகிறோம்.
காஷ்மீர் பிரச்சனையை பொருத்தவரை ஐக்கிய நாடுகளின் சபை அது தொடர்பாக நிறைவேற்றியுள்ள தீர்மானங்கள் தவிர்க்க முடியாதவை ஆகும். எனவே அதனடிப்படையிலேயே நாமும் செயல்படுவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.