கருணாநிதி நினைவிடத்தில் இன்று கவிஞர்கள் கவிதாஞ்சலி

366 0

கருணாநிதி மறைந்து ஒரு மாதம் ஆன நிலையில் அவரது நினைவிடத்தில் கவிஞர்கள் இன்று கவிதை வாசித்து அஞ்சலி செலுத்துகின்றனர். 

கருணாநிதி மறைந்து ஒரு மாதம் ஆனாலும் திரண்டு வரும் கண்ணீரோடு தங்கள் மனம் கவர்ந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்த மட்டும் தினமும் திரண்டு வருகிறது மக்கள் கூட்டம்.

வங்க கடலோரம் துயில் கொண்டிருக்கும் அண்ணாவின் நிழலில் அவரது தம்பி இளைப்பாறி கொண்டிருக்கிறார்.

ஓய்வெடுக்காமல் உழைத்தவர் இதோ ஒய்வெடுக்கிறார் என்று பொறிக்கப்பட்ட வாசகங்களுடன் கருப்பு கண்ணாடி, மஞ்சள் துண்டுடன் மறையாத புன்னகையுடன் சட்டத்துக்குள் படமாக இருந்து மெரினாவில் தனது உடன் பிறப்புகளை பார்த்து கொண்டிருக்கிறார்.

உதய சூரியனாகவே தமிழகம் முழுவதும் வலம் வந்து பிரகாசித்துக் கொண்டிருந்த கலைஞர் என்ற சூரியன் அஸ்தமித்து 30 நாட்கள் நாளையுடன் நிறைவு பெறுகிறது.

மறந்தால்தானே நினைப்பதற்கு பயணித்து களைத்து நிரந்தர ஓய்வுக்காக விடை பெற்ற கலைஞரின் உடலை லட்சக் கணக்கான மக்கள் சுமந்து சென்று மெரினா கடற்கரையில் இளைப்பாற வைத்தார்கள்.

தலைவனைத் தான் காண முடியவில்லை. அவர் துயில் கொள்ளும் இடத்தையாவது பார்ப்போம் என்று அன்று முதல் தினம் கூட்டம் கூட்டமாக தொண்டர்களும், அனுதாபிகளும் நினை விடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

அடக்கம் நடந்த மறுநாளே அடங்காத கண்ணீருடன் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர் வந்தமர்ந்து அஞ்சலி செலுத்தி சென்றார்கள்.

தமிழ்பாலூட்டி தந்தையாய் அரவணைத்த தன் தாய் தமிழுக்கு கவிப்பேரரசு வைரமுத்து பாலூற்றி நன்றி கடமையாற்றினார்.

கூட்டம் அதிகரித்ததால் சுற்றிலும் தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டு போலீசாரும், தி.மு.க. தொண்டர்களும் பாதுகாப்பு பணியில் இறங்கினார்கள்.

மாவட்ட வாரியாக வந்து அஞ்சலி செலுத்தி செல்ல ஏற்பாடுகள் செய்துள்ளனர். கட்சி அமைப்புப்படி 65 மாவட்டங்கள். அதில் சுமார் 30 மாவட்ட தொண்டர்கள் இதுவரை அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள்.

அஞ்சலி செலுத்த வருபவர்களில் அரசியல், கட்சி, கொள்கைகளுக்கு அப்பாற் பட்டு சமகாலத்தில் வாழ்ந்த முதுபெரும் தலைவர் என்ற உணர்வுடன் வந்து பார்த்து மரியாதை செலுத்தி செல்பவர்களும் ஏராளம்.

கலைஞர், அரசியல், கலை இலக்கியம் என்று அத்தனையிலும் முத்திரை பதித்தவர். கலைகளை ரசிப்பது மட்டுமல்ல, வடிப்பதிலும் அவருக்கு நிகர் அவரே.

அப்படிப்பட்ட தலைவருக்கு தொண்டர்களும் தங்கள் ரசனைக்கு ஏற்றபடி நினைவிடத்தில் மலர்கள், பழங்கள் என்று பலவகை பொருட்களால் அலங்காரம் செய்து வருகிறார்கள். அன்னாசி பழங்களால் உதய சூரியன், சுற்றிலும் பலவகை பழங்களால் அலங்காரம் செய்து அழகுபடுத்தினார்கள்.

விதவிதமான மலர்களால் நட்சத்திரத்தை வடிவமைத்து என்றும் நீங்கள் எங்களுக்கு துருவ நட்சத்திரமே என்பதை சொல்லாமல் சொன்னார்கள்.

கலைஞரின் பேனா முனைக்கு நிகரான வலிமையும் இல்லை. கருப்புக் கண்ணாடிக்கு நிகரான அழகும் இல்லை. கலைஞரின் நிரந்தர அடையாளமாக திகழும் இவற்றை அடை யாளப்படுத்தும் வகையில் பிரமாண்டமான மூக்கு, கண்ணாடி மற்றும் பேனா வடிவத்தில் அவரது நினை விடத்தை நடிகர் மயில்சாமி அழகுபடுத்தினார்.

மலை முகடுகளுக்கு இடையில் இருந்து உதய சூரியன் உதித்து வருவது போன்ற கட்சி சின்னத்தை வண்ண வண்ண பூக்களால் தினமும் வடிவமைத்தனர். மு.க. என்ற எழுத்தையும் மலர்களால் பிரமாண்டமாக வடிவமைத்து வைத்தார்கள்.

பகலில் கூட்டமாக இருக்கும். அமைதியாக நின்று பார்க்கவும், அஞ்சலி செலுத்தவும் சிரமமாக இருக்கும் என்பதால் பலர் குடும்பம் குடும்பமாக நள்ளிரவிலும் வந்து செல்வது எந்த அளவுக்கு கலைஞர் ஒவ்வொரு வரையும் ஈர்த்துள்ளார் என்பதை வெளிப்படுத்துகிறது.

வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு சென்று திரும்பிய விஜயகாந்த் நேரடியாக கலைஞர் நினைவிடம் சென்று கண்கலங்கி அழுதார். நடிகர் விஜய், திரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் இரவு நேரத்தில் தனியாக சென்று அஞ்சலி செலுத்தி னார்கள்.

மக்கள் மனம் கவர்ந்த தலைவரைப் பற்றி அறிந்து வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வந்த பயணிகளும் நினைவிடத்தை பார்க்க தவறவில்லை.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும், மவுன ஊர்வலமாக சென்று தன் மனம் கவர்ந்த கலைஞருக்கு அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து சென்றார்.

ஒரு மாதம் நிறைவடையும் நிலையில் மு.க. அழகிரி பிரமாண்டமாக அமைதி பேரணி நடத்தி அஞ்சலி செலுத்தினார். அரசியல் பார்வை இருந்தாலும் கட்சி தலைவருக்கு செலுத்திய மவுன அஞ்சலி தான் என்றார் மு.க. அழகிரி.

30-வது நாளான இன்று ஆயிரம் கவிஞர்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை கவிதாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்துள்ளார். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு காலை 7 மணிக்கு 100 கவிஞர்கள் கலைஞர் நினைவிடத்தில் சென்று கவிதை பாடுகிறார்கள்.

முத்தமிழாய் வாழ்ந்த முத்தமிழ் அறிஞரின் நினை விடம் முப்பது நாள் மட்டுமல்ல என் நாளுமே தமிழ் போல் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a comment