ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அற்புதம்மாள் கூறியுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை கைதிகள் பற்றிய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பால் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று இருக்கிறார். வண்டலூர் ஓட்டேரி இல்லத்தில் அவரை தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், தமிழ் ஆர்வலர்கள் சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். இது குறித்து பேரறிவாளனின் தாயார் நிருபருக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் நிருபர் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:-பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை சம்பந்தமாக முடிவு எடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து இருக்கிறதே?
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதை கருத்தில் கொண்டு, கவர்னரிடம் ஆலோசனை செய்தோ அல்லது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை போல் சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியோ என் மகன் உள்ளிட்ட 7 பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் என்னுடைய ஒரே வேண்டுகோள். இந்த விஷயத்தில் இனியும் கால தாமதம் செய்யக்கூடாது.
கேள்வி:- முதல்-அமைச்சரை சந்தித்து, அவர்களின் விடுதலை குறித்து நேரில் வேண்டுகோள் விடுக்க இருக்கிறீர்களா?
பதில்:- இந்த தீர்ப்பின் முழு விவரம் வந்ததும் நான் முதல்-அமைச்சரை சந்திப்பேன். நாளைக்கு (இன்று) போகலாம் என்று நினைக்கிறேன். தீர்ப்பின் முழு விவரம் வேண்டும், மனு தயார் செய்ய வேண்டும் அல்லவா?. வக்கீல்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை கேட்டு மனு தயார் செய்ய வேண்டும்.
கேள்வி:-இந்த தருணம் உங்களுக்கு எப்படி உள்ளது?
பதில்:-நம்பிக்கையாக இருக்கிறதுப்பா…
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.