கல்லறை மீது கண்ணீர் மல்கி ஆரம்பிக்கப்பட்ட 5 வது நாள் ஐநா நோக்கிய மனிதநேயப் பயணம்

647 0


தமிழின அழிப்புக்கு நீதி கோரி பிரித்தானியாவில் இருந்து ஐநா நோக்கி ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் இன்று ஐந்தாவது நாளாக பெல்ஜியம் நாட்டில் அமைந்துள்ள மாவீரர் கல்லறை முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. பெல்ஜியம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கல்லறைக்கான அகவணக்கத்துடன் மனிதநேய பயணம் ஐநா நோக்கி தொடர்ந்தது. வணக்க நிகழ்வில் உரையாற்றிய மனிதநேயபணியாளர் திரு குமார் அவர்கள் , பெல்ஜியத்தில் அமைந்துள்ள மாவீரர்களுக்கான இக் கல்லறையை இன்றுதான் முதல் தடவையாக தான் காண்பதற்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் , அதை காணும்போது நிச்சயமாக நாம் தமிழீழத்தை அடைந்தே தீருவோம் என கண்ணீர் மல்கி தெரிவித்தார்.

இன்றைய தினம் பெல்ஜியத்தில் ஐரோப்பிய கொள்கை வகுப்பாளர்களுடன் சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் தாயகத்தில் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலையையும் , தமிழின அழிப்புக்கு அனைத்துலக விசாரணையையும் வலியுறுத்தப்பட்டது.

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களும் இயற்கை பாதுகாப்புக்காக இன்றைய தினம் ஈருருளிப்பயணம் ஒன்றை ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு முன்பாக ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.

பாரிஸ் மாநகரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் 3 வது நாளாக இன்று காலை புறவன்ஸ் என்னும் நகரத்தில் இருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமாகி ஸ்ட்றாஸ்புர்க் மாநகரை நோக்கி செல்கின்றது.

பாரிசில் இருந்து புறப்பட்ட ஈருருளிப்பயணம் 220 கிலோ மீற்றர் தாண்டி சென்று கொண்டிருக்கும் வேளை போகும் பாதையில் 1ம்2ம் உலகயுத்தத்தில் உயிர் நீத்த வீரர்களுக்காக நிறுவப்பட்ட திருவுருவச்சிலைக்கு முன்பாக நின்று நெஞ்சில் நம்பிக்கை என்னும் உரம் ஏற்றிச்சென்றனர்.

ஐநா மனிதவுரிமை அமர்வை முன்னிட்டு டென்மார்க் பாராளுமன்றத்தில்,டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றிய பிரதிநிதிகள் 03.09.2018 அன்று தினம் இராசதந்திரச் சந்திப்பு ஒன்றை நடாத்தியது குறிப்பிடத்தக்கது. அதில் இப்போதைய தமிழர் தாயக,அரசியல் நிலைப்பாடு பற்றி அதிக கரிசனையை டெனிஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் காட்டியதாக சந்திப்பில் ஈடுபட்ட பிரதிநிதிகள் கூறியுள்ளார்கள். குறிப்பாக தமிழர் தாயக நிலப்பரப்பில் தற்போது சிறிலங்காவின் நல்லாட்சி அரசின் நேரடி ,மற்றும் மறைமுக ஆதரவுடனான மகாவலி நீர்ப்பாசன திட்ட நில அபகரிப்பு , வடகிழக்கு கரையோர தமிழர் மீனவர்கள் மீதான சிங்கள மீனவர்களின் அத்து மீறல், சிறிலங்காப் படைகளின் தமிழர் தேச நில ஆக்கிரமிப்பு மற்றும் அதன் ஊடான படைகளின் பொருளாதார மேலாண்மைச் செயற்பாடுகள் என்பனவும் , மற்றும் தமிழ் பெண்கள் மீதான பாலியல் ,போதைப்பொருள் வன்கொடுமைகள் கலாச்சார அத்துமீறல்கள் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற டெனிஸ் வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகளுடனான சந்திப்பில் , முக்கிய விடயமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் இலங்கையின் பொறுப்பு கூறல் தொடர்பான தீர்மானங்கள் மீது சர்வதேசம்அழுத்தங்களை சிறிலங்கா அரசிற்கு கொடுக்க வேண்டும் என்பனவும் இன அழிப்பிற்கு நீதி வேண்டியும் அழுத்தமாக கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

எதிர்வரும் 09.09.2018 அன்று நோர்வே பாராளுமன்றத்திற்கு முன்பாக ஐநா நோக்கிய தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் கண்காட்சி ஊர்திப்பயணமும் ஆரம்பமாக உள்ளது. இப்பயணம் சுவீடன் , டென்மார்க் , யேர்மனி, இத்தாலி நாடுகளின் தலைநகரங்களை ஊடறுத்து இறுதியாக ஜெனீவா மாநகரத்தை சென்றடைய உள்ளது.

தமிழின அழிப்புக்கு பரிகார நீதியை வலியுறுத்தும் உபநிகழ்வொன்றும் எதிர்வரும் 24.09.2018 அன்று ஐநா வில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையில் ஒழுங்குசெய்யப்படுகின்றது.

ஐநா மனிதவுரிமை பேரவையின் அமர்வை முன்னிட்டு எதிர்வரும் 17.09.2018 அன்று ஜெனிவா மாநகரத்தில் நடைபெறும் மாபெரும் பொங்குதமிழ் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு மனிதநேய பணியாளர்கள் உரிமையுடன் வேண்டிக்கொள்கின்றார்கள்.

எதிர்வரும் 14.09.2018 அன்று கனடா தேசத்திலும் “எமது நிலம் எமக்கு வேண்டும்” எனும் மாபெரும் கவனயீர்ப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment