பாஸ்போர்ட்டுடன் ஆஜராக சோபியாவுக்கு போலீஸ், ‘சம்மன்’

237 0

விமானத்தில், பா.ஜ.,வை விமர்சித்து கோஷம் எழுப்பிய மாணவி சோபியா, பாஸ்போர்ட்டுடன், துாத்துக்குடி போலீஸ் ஸ்டேஷனில், நாளை ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து, துாத்துக்குடிக்கு விமானத்தில் பயணித்த, பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை முன்பாக, பா.ஜ.,வை விமர்சித்து சக பயணியான சோபியா கோஷமிட்டார். விமானம் துாத்துக்குடியில் தரையிறங்கியதும், சோபியாவிடம் இது குறித்து, தமிழிசை கேட்க, வாக்குவாதமாக மாறியது.விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டரிடம், தமிழிசை புகார் அளித்தார். இதையடுத்து, சோபியா கைது செய்யப்பட்டார். பின் நேற்று முன்தினம் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.இந்நிலையில், சோபியாவை, புதுப்பிக்கப்பட்ட ஒரிஜினல் பாஸ்போர்ட்டுடன், நாளை நேரில் ஆஜராகும் படி, துாத்துக்குடி, புதுக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனிலிருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து, சோபியாவின் வழக்கறிஞரும், உறவினருமான அதிசயகுமார் கூறியதாவது:நாளை, பாஸ்போர்ட்டுடன், நேரில் ஆஜராகும்படி, புதுக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனிலிருந்து சோபியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அன்று, அவர் நேரில் ஆஜராவார். ஒருவருடைய பாஸ்போர்ட்டை கேட்கும் அதிகாரம், போலீசாருக்கு கிடையாது.நீதிமன்றத்திற்கு மட்டுமே, அந்த அதிகாரம் உண்டு. பாஸ்போர்ட்டை ஒப்படைக்க மாட்டார். இதை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், சோபியாவின் ஜாமினை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய போவதாக, பா.ஜ., வழக்கறிஞரும், துாத்துக்குடி மாவட்ட பொருளாளருமான சண்முகசுந்தரம் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறினார்.

அமைச்சர் உறுதி : இதற்கிடையில், ஒட்டப்பிடாரத்தில் நிருபர்களிடம் பேசிய செய்தித்துறை அமைச்சர், ராஜு கூறியதாவது:தமிழகத்தில், அனைவருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. யாரும், யாரையும் விமர்சனம் செய்யலாம்.அந்த மாணவி, தமிழிசையை தனியாக அழைத்து, விமர்சனத்தை சொல்லியிருக்கலாம். விமானத்தில் அப்படி கோஷமிட்டிருக்கவேண்டியதில்லை.சோபியாவுக்கு கொலை மிரட்டல் விடப்பட்டிருந்தால், அரசு அவருக்கான பாதுகாப்பை வழங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment