அமைச்சர் உள்ளிட்ட யாராக இருந்தாலும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.
தென்காசியை அடுத்த குற்றாலத்தில் தேவேந்திர குல வேளாளர்கள் 1000 பேர் பா.ஜ.க-வில் இணையும் விழா நடைபெற்றது. விழாவிற்கு சிவநாதன் தலைமை தாங்கினார். குற்றாலம் நகர தலைவர் செந்தூர் பாண்டியன் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் குமரேச சீனிவாசன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் அன்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மாநில துணைத்தலைவர் நாகராஜன் கலந்து கொண்டு பேசினர். பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜ.க-வின் மக்கள் நல திட்டங்களை தமிழகத்தில், மக்கள் விரோத திட்டங்களாக பரப்பி வருகிறார்கள். நீட் தேர்வை மக்களுக்கும், தமிழகத்திற்கும் வேண்டாத திட்டங்களாக கூறி வருகிறார்கள். அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 40 மாணவிகள் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
எனவே நீட் தேர்வு பயிற்சியை எந்த குளறுபடிகளும் இல்லாமல் மக்களுக்கு கொடுக்க வேண்டும். நீட் தேர்வில் மாணவர்கள் பாதிப்படையாத வகையில் அதற்கென தனி ஆசிரியர்களை நியமித்து பயிற்சி அளிக்க வேண்டும் என தமிழக கல்வி துறை அமைச்சரிடம் கேட்டு கொண்டுள்ளேன். மேலும் பல கல்லூரி நிறுவனங்களில் ஊழல் நடைபெற்றுள்ளது. எந்தெந்த கல்வி நிறுவனங்களில் ஊழல் நடைபெற்றுள்ளதோ அங்கெல்லாம் ஊழல் களையப்பட உயர்கல்வி துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வழிபாட்டு தலங்களிலும், வழிகாட்டு தலங்களிலும் தமிழகத்தில் ஊழல் மேலோங்கி இருக்கிறது. எனவே இதனை சரி செய்ய வேண்டும் என்று முதல்வருக்கு தனிப்பட்ட கோரிக்கையாக வைக்கிறேன். காவல் துறையில் பணியாற்றும் பெண் அதிகாரி மீதான பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தண்ணீர் வீணாகி கொண்டிருக்கிறது.
5 முறை ஆட்சி செய்த தி.மு.க.வினர் கடைக்கோடி தமிழனுக்கும் டாஸ்மாக் மது போவதை உறுதி செய்தார்கள். கடை மடை கால்வாய்க்கு தண்ணீர் போவதை தி.மு.க.வினர் உறுதி செய்யவில்லை. நீர்நிலை கட்டமைப்பை பொறுத்த வரை அ.தி.மு.கவை மட்டும் குற்றம் சொல்வது சரியல்ல. 5 முறை ஆட்சி செய்த தி.மு.க.வும் பொறுப்பு. நீர் மேலாண்மை தெரிந்த வெளிநாட்டு நிபுணர்களை வரவழைத்தாவது முக்கொம்பை சரி செய்து வெளியேறும் நீரை சேமிக்க வேண்டும். எந்த தலைவராக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும் ஊழல் குற்றசாட்டிற்கு உள்ளானால் அவர்கள் விசாரிக்கப்பட வேண்டும். குற்றம் நிரூபிக்கப் பட்டால் தண்டிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.