எம்.எல்.ஏ.வுக்கும் எனக்கும் 20 வயது வித்தியாசம் என்பதால் திருமணம் பிடிக்கவில்லை என்று மணப்பாறையில் மீட்கப்பட்ட இளம்பெண் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரன்.
இவருக்கும் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியார் நகரை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகள் சந்தியா (வயது 23) என்ற எம்.சி.ஏ. பட்டதாரி பெண்ணுக்கும் வருகிற 12-ந் தேதி திருமணம் நடக்க இருந்தது.
பண்ணாரி அம்மன் கோவிலில் திருமணத்தை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டன. திருமண பத்திரிகை அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கு கொடுத்து அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி மணமகள் சந்தியா வீட்டில் இருந்த வெளியே சென்றார். ஆனால் அதன்பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
பல இடங்களில் தேடி பார்த்தும் அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் மாயமானது குறித்து கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
புகாரில் தனது மகளுக்கும், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள கொளத்தூர்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ் (25) என்பவருடன் பழக்கம் இருந்ததாகவும் மகளை மீட்டு தரும்படியும் கூறி இருந்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது எம்.எல்.ஏ.வுடனான திருமணம் பிடிக்காததால்தான் சந்தியா வீட்டை விட்டு வெளியேறி மாயமானது தெரிய வந்தது.
இந்த நிலையில் சந்தியாவின் செல்போன் எண் மூலம் விசாரித்தபோது அவர் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருப்பது தெரிந்தது.
இதையடுத்து கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல், சப்-இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையில் போலீசார் மணப்பாறைக்கு சென்றனர்.
போலீசார் அங்கு சென்றபோது வீட்டில் சந்தியாவும், சத்யாவும் இருந்தனர். இதையடுத்து போலீசார் சந்தியாவை மீட்டு கோபிக்கு அழைத்து வந்தனர்.
நேற்று மாலை கோபி ஜே.எம்.-1 கோர்ட்டில் சந்தியா ஆஜர்படுத்தப்பட்டார். தனி அறையில் வைத்து சந்தியாவிடம் மாஜிஸ்திரேட்டு பாரதிபிரபா விசாரித்தார்.
அப்போது திருமணம் பிடிக்காததால்தான் வீட்டை விட்டு வெறியேறியதாக சந்தியா கூறினார். மேலும் பெற்றோருடன் செல்ல மாட்டேன் என்று கூறிய அவர் கோவையில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு தன்னை அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.
பின்னர் சந்தியாவின் பெற்றோரிடம் மாஜிஸ்திரேட்டு விசாரித்தார். அப்போது அவர்களிடம் சந்தியா கூறிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால் சந்தியாவின் பெற்றோர் தனது மகளை தங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்றனர்.
இதைத்தொடர்ந்து முதலில் மறுப்பு தெரிவித்த சந்தியா பின்னர் தனது பெற்றோருடன் செல்ல சம்மதம் தெரிவித்தார். அதன்படி சந்தியாவை திருமணத்துக்கு கட்டாயப்படுத்தக்கூடாது.
அவரை அடித்து துன்புறுத்துவதோ, உறவினர்கள் அவரிடம் விசாரிக்க அனுமதிக்கவோ கூடாது என்று சந்தியாவின் பெற்றோருக்கு மாஜிஸ்திரேட்டு அறிவுரை கூறினார். பின்னர் சந்தியா அவரது பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
முன்னதாக சந்தியா கடத்தூர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
எனக்கும் எம்.எல்.ஏ.வுக்கும் 20 வயது வித்தியாசம் இருந்ததால் திருமணம் செய்ய பிடிக்கவில்லை என எனது பெற்றோரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் திருமணம் செய்ய வற்புறுத்தினர்.
மேலும் திருமணம் செய்யாவிட்டால் நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்வோம் என அவர்கள் மிரட்டினர்.
ஆகையால் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டேன். ஆனால் எனக்கு திருமணம் செய்ய பிடிக்கவில்லை. எனவே பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்றேன்.
மணப்பாறையில் உள்ள எனது தோழி சத்யா வீட்டில் தங்கியிருந்தேன். அங்கு என்னை போலீசார் மீட்டு கோபி கோர்ட்டிற்கு அழைத்து வந்தனர்.இவ்வாறு சந்தியா கூறியுள்ளார்.