ஆசிரியர் தின விருதுகளைப் பெறும் ஆசிரியர்களுக்கும், பண்பட்ட சமுதாய உணர்வுகளை உருவாக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஆசிரியர் சமுதாயத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-
கல்வி வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி, நாட்டின் முன்னேற்றத்திற்கு வித்திடும் அறிவுசார்ந்த இளைஞர் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கு தி.மு.க. சார்பில் இதயம் நிறைந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சமுதாய மறுமலர்ச்சி, சாதி பேதமற்ற சமத்துவ உணர்வு, மத பேதமற்ற மானிட சமுதாயத்தின் மாண்பு அனைத்திற்கும் தேவையானது ஆசிரியர்கள் நடத்தும் கல்விப்புரட்சி என்பதை நானறிவேன்.
ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை தரமான கல்வியை வழங்கிட தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து, அறிவு மணிகளைக் கோர்த்தெடுத்து வருங்கால தலைமுறையை உருவாக்கும் மாமணிகளாகத் திகழும் தியாக உணர்வுமிக்க ஆசிரியர்களை இந்த நாடே ஓரணியில் நின்று மனமார வாழ்த்துகிறது; மதித்துப் பாராட்டிக் கொண்டிருக்கிறது.
ஆகவே, அந்த பாராட்டுதலில் தி.மு.க.வும் இணைந்து, இன்றைய தினம் ஆசிரியர் தின விருதுகளைப் பெறும் ஆசிரியர் பெருமக்களை வாழ்த்தி, பண்பட்ட சமுதாய உணர்வுகளை உருவாக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஆசிரியர் சமுதாயத்திற்காக அவர்களின் சீரிய நலன்களுக்காக தி.மு.க. எந்நாளும் துணை நிற்கும் என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.