அமெரிக்க பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் விடுதலை தொடர்பான அமெரிக்காவின் கோரிக்கை சட்ட விரோதமாக இருப்பதால் அதை நிறைவேற்ற முடியாது என துருக்கி அறிவித்துள்ளது.
துருக்கியில் ராணுவ புரட்சி மூலம் கடந்த 2016-ம் ஆண்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டு பின்னர் மக்கள் செல்வாக்குடன் அது முறியடிக்கப்பட்டது.
இதற்கிடையே, ஆட்சி கவிழ்ப்பிற்கு திட்டம் தீட்டிய துருக்கிய அரசியல் குழு ஒன்றுடன் அமெரிக்க பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் என்பவர் தொடர்பு வைத்திருந்து உளவு வேலை பார்த்தார் எனும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை விடுதலை செய்யக்கோரி அமெரிக்கா பலமுறை கோரிக்கை விடுத்தும் துருக்கி அதை கண்டுகொள்ளாததால் அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் உலோகப் பொருட்களுக்கு இறக்குமதி வரியை அமெரிக்கா இரட்டிப்பாக உயர்த்தியது.
இதற்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து துருக்கியில் இறக்குமதி செய்யப்படுகிற மதுபானங்கள் மீதான வரியை 140 சதவீதமாகவும், கார்கள் மீதான வரியை 120 சதவீதமாகவும், புகையிலை மீதான வரியை 60 சதவீதமாகவும் உயர்த்தி துருக்கி அதிபர் எர்டோகன் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில், பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் விடுதலை தொடர்பான அமெரிக்காவின் சட்ட விரோத கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என துருக்கி அதிபர் எர்டோகன் ஊடங்களிடம் இன்று தெரிவித்தார்.
இது தொடராக அதிபர் எர்டோகன் கூறுகையில், ‘துருக்கி சட்டத்தையும், விதிமுறைகளையும் பின்பற்றி மட்டுமே செயல்படும். இரட்டை வரிவிதிப்பு போன்ற மிரட்டல்கள் மூலம் எங்களை பணிய வைக்கலாம் என அமெரிக்கா நினைக்க கூடாது. பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால், சட்ட விரோதமாக அமெரிக்காவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது’ என கூறினார்.
துருக்கி-அமெரிக்கா இடையே நாளுக்கு நால் வலுத்து வரும் மோதல் இந்தியா உள்பட பிற நாடுகளின் பொருளாதாரத்திலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.