கிளிநொச்சி குளத்தின் நீரேந்து பகுதியில் அத்துமீறிய குடியிருப்புகள்

235 0

கிளிநொச்சி குளத்தின்  நீரேந்து பகுதியும், இரத்தினபுரம் பாலத்தின் ஒதுக்கீட்டு பகுதிகளும் தனியார்களால் அத்து மீறல்கள் தொடர்ந்து  இடம் பெற்று வருகின்றது.

ஊடகங்களும், பொது அமைப்புகளும் இதனை சுட்டிக்காட்டி  வருகின்ற  நிலையில்  அவை நிறுத்தப்பட்டதாக தெரியவில்லை என மீண்டும் பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி குளத்தின் நீரேந்து பகுதியும், இரத்தினபுரம் பாலத்தின் இருமருங்கிலும் பல தனியார்கள் நிலங்களை அத்துமீறி பிடித்து கட்டடங்கள் மற்றும் மதில்களை அமைத்துள்ளமையினால்  மழைக்காலங்களில் வெள்ளம்  வழிந்தோடுவதில் நெருக்கடி ஏற்பட்ட சம்பவங்கள் கடந்தகாலங்களில் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் குறித்த பகுதிகளில் இடம்பெறும் தனியார்களின் அத்துமீறலை கட்டுப்படுத்துமாறு பலரும் பல தடவைகள் கூறிய  போதும் சம்மந்தபட்ட முதன்மை திணைக்களமான நீர்ப்பாசனத் திணைக்களம்  பாராமுகமாக இருந்துள்ளது.

இதனால் அதிகளவான அத்துமீறல்கள் குறித்த பகுதியில் இடம்பெற்றது.

இந்த நிலையில் மீண்டும் அந்தப்பகுதியில் பளை பிரதேசத்தில் இருந்து வந்து ஒருவர் பாலத்தின் அருகில் இரவோடு இரவாக கொட்டில் ஒன்றை அமைத்துக்கொண்டு மாற்றுத்திறனாளியான பிள்ளையுடன் வசிக்கின்றார்.

இதனை அறிந்த நீர்ப்பாசனத்திணைக்களம்,  பிரதேச செயலக  அதிகாரிகள், கிராம அலுவலர் ஆகியோர் சென்று குறித்த நபருடன் பேசிய போதும் அவர் குறித்த இடத்தை விட்டு செல்லவில்லை  எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலை தொடர்ந்தால் வருங்காலத்தில்  மேலும் பலரும்  புதிது புதிதாக அத்துமீறி குடியிருக்க முற்படுவார்கள் எனவே இவற்றை உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டும் என குறித்த பிரதேசத்தின் பொது மக்கள் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment