தமிழர்களது பண்டைய கால மரபு ரீதியான வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையில் ‘மரபு சார் கிராமம்” மற்றும் ‘மரபுரிமை பொருட் காட்சியகம்” ஆகிய இரு ஆவண காப்பகங்களை அமைக்கவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி, பண்பாடு, கலை கலாசார விளையாட்டுத்துறை அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழர்களது வாழ்வியலானது நீண்ட கால வரலாற்றை கொண்டதும் தனித்துவமான பல பண்புகளை கொண்டதாகவும் அமைந்துள்ளது. எமது மக்கள் பண்டைய காலங்களில் இயற்கையோடு ஒன்றித்த வாழ்வியலை கொண்டிருந்தார்கள். ஆயினும் கால மாற்றத்தினால் எமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையில் இருந்து முற்றாக மாறுபட்ட வாழ்வியல் சூழலுக்குள் பழக்ப்பட்டுள்ளோம்.
தனித்துவமான கலை கலாச்சாரங்களை கொண்ட தமிழர்கள் தற்போது கலாச்சார மாற்றங்களுக்கும் உட்பட்டு வருகின்றோம். இந்நிலையில் எமது எதிர் கால சந்த்தியினருக்கு எமது முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள், அவர்கள் எவ்வாறான முறையில் விவசாயம் செய்தார்கள், அவர்களது கலை கலாச்சாரம் என்ன, உணவு பழக்க வழக்கங்கள் என்ன அவர்கள் எத்தகைய பொருட்களை பயன்படுத்தினார்கள் என்பதை எல்லாம் அறிய தரவேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.
எனவே தான் அவற்றை ஆவணப்படுத்தி அதனை எதிர்கால சந்ததியினருக்கு தெரியப்படுத்துவதற்காக தமிழர் தம் வாழ்வியலை வெளிப்படுத்தும் விதமாக ‘மரபு ரீதியான வாழ்வியல் கிராம்’ என்பதை உருவாக்கி அங்கே கடந்த எமது வாழ்வியல் விடயங்களை உள்ளடக்கிய நிறுவனமொன்றை அமைக்கவுள்ளோம்என்றார்.