ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஆட்சியில் சிங்களக் குடியேற்றங்கள் நடக்கவில்லை என்பது தமிழ் மக்கள் பெருமைப்படக்கூடிய விடயமல்ல எனத் தெரிவித்த வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், அத்தனை சிங்கள குடியேற்றங்களையும் செய்தவர் மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் இப்போதைய ஜனாதிபதியாக இருக்கும் மைத்திரிபால சிறிசேனவே ஆவார் என்றும் சுட்டிக்காட்டினார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் எவையும் இடம்பெறவில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்த கருத்து தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை குறிப்பிட்ட அவர்,
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின் எல்லையில் பாரியளவிலான சிங்கள குடியேற்றத்தை உருவாக்கும் நோக்குடன் ஹிபுல் ஓயா திட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர் வெள்ளக்கல்லடி என்ற பகுதியில் சிங்கள மக்கள் குடியேற முயற்சித்த நிலையில் தமிழ் மக்கள் காட்டிய எதிர்ப்பினால் அது நிறுத்தப்பட்டது.
அதேபோல் சிவந்தாமுறிப்பு என்ற பகுதியில் அண்மையில் சிங்கள மக்கள் கனரக வாகனங்களுடன் வந்து குடியேற முயற்சித்த நிலையில் அதுவும் தமிழ் மக்களுடைய கடுமையான எதிர்ப்பினால் கைவிடப்பட்டது.
மேலும் மகாவலி அதிகாரசபை ஊடாக காணிகளை அபகரிப்பதற்கு மேலாக வனவள திணைக்களம், தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என பல வடிவங்களில் இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுடைய பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றார்.