தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும்- அமைச்சர் காமராஜ் தகவல்

237 0

தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதன் அடிப்படையில் தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும்.

மத்திய அரசின் நிர்ப்பந்தம் காரணமாக நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படவில்லை. சட்டப்பூர்வ விதிகள் காரணமாகத்தான் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மத்திய அரசின் முகவராக இருந்து கொண்டுதான் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்கிறோம். ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதால் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்படும். மேலும் அக்டோபர் மாதத் தில் புதிய ஆதார விலை அறிவிக்கப்படும். இது ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் நடைமுறைதான்.

அதே நேரத்தில் வட்ட தலைநகரங்களில் உள்ள பகுதிகளில் கொள்முதல் நிலையங்கள் செயல்படும். மேலும் நடப்பாண்டில் வெளிப்பகுதிகளில் நெல்லுக்கான விலை குறைத்து வழங்கப்படுவதால் விவசாயிகள் நேரடி கொள்முதல் நிலையங்களை நாடி வருகிறார்கள்.

எனவே எந்தெந்த இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதோ, அங்கு விவசாயிகளின் தேவைக்கேற்ப கொள்முதல் நிலையங்கள் உடனடியாக திறக்கப்படும்.

இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளுக்கு போதிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment