நிருபர்களை விடுதலை செய்யுமாறு மியான்மர் அரசுக்கு மனித உரிமைகளுக்கான ஐ.நா. மன்றம் வலியுறுத்தல்

1113 0

மியான்மர் நாட்டில் இன்று 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட இரு நிருபர்களை விடுதலை செய்யுமாறு அந்நாட்டு அரசை மனித உரிமைகளுக்கான ஐ.நா.மன்றம் வலியுறுத்தியுள்ளது. 

மியான்மர் நாட்டின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் மீது கடந்த ஆண்டு நடைபெற்ற ராணுவத்தினரின் உச்சகட்ட தாக்குதலில் சுமார் 20 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டின.
உயிருக்கு பயந்து சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்றனர். மியான்மரில் இருந்தபோது ரோஹிங்கியா இனப் பெண்களை ராணுவத்தினர் கொடூரமான முறையில் கற்பழித்ததாகவும் தகவல்கள் வெளியானது.
இதற்கிடையில், மியான்மர் நாட்டின் பாதுகாப்புக்குரிய ரகசியத்தை திருடியதாக ரய்ட்டர்ஸ் என்னும் பிரபல செய்தி நிறுவனத்தை சேர்ந்த இரு நிருபர்களை கடந்த டிசம்பர் மாதம் போலீசார் கைது செய்தனர்.
ரக்கினே மாநிலத்துக்குட்பட்ட இன்டின் என்னும் கிராமத்தில் சட்டமீறலாக பத்து பேரை சுட்டுக் கொன்றது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றபோது, தங்களை ஓட்டலுக்கு சாப்பிட வருமாறு அழைத்த போலீசார் சில ஆவணங்களை தங்களிடம் தந்ததாகவும், ஓட்டலை விட்டு வெளியே வந்ததும் நாட்டின் ரகசியத்தை திருடியதாக கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் கைதான நிருபர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கைதான நிருபர்கள் மீதான தேசத்துரோக வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி யாங்கூன் நகர நீதிபதி யே ல்வின், குற்றம்சாட்டப்பட்டிள்ள வா லோனே(32), கியாவ் சொய் ஊ(28) ஆகியோர் நாட்டின் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் வகையில் முக்கிய  ரகசியத்தை திருடியுள்ளனர் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் இவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறேன் என உத்தரவிட்டார்.
தங்களது நிருபர்களுக்கு விதிக்கப்பட்ட இந்த தண்டனை தொடர்பாக கருத்து தெரிவித்த ரய்ட்டர்ஸ் நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் ஸ்டீபன் ஜே அட்லர் ‘இன்று மியான்மருக்கும் உலகெங்கும் உள்ள ஊடகவியலாளர்களுக்கும் சோகமான நாள்’ என தெரிவித்துள்ளார்.
இந்த தண்டனைக்கு எதிராக உலகம் முழுவதும் கண்டனக்குரல் வலுத்துவரும் நிலையில் அவர்களை விடுதலை செய்யக்கோரி மியான்மர் நாட்டின் பல பகுதிகளில் மனித உரிமை ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,  சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு நிருபர்களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு மியான்மர் அரசை  மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உயர் கமிஷனர் மிச்சேல் பச்செலெட் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விசாரணை முறைகளுக்கான சர்வதேச அளவீடுகளை மீறிய வகையில் இவர்கள் (நிருபர்கள்) தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலமாக மியான்மரில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்களும் அச்சமின்றி செயல்பட முடியாது. ஒன்று தங்களை மிதப்படுத்தி கொள்ள வேண்டும். அல்லது, வழக்கை சந்திக்கும் சவாலை ஏற்க வேண்டும் என்னும் தவறான செய்தியை இந்த வழக்கின் தீர்ப்பு வெளிப்படுத்தி உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment