லோக்பால், லோக்ஆயுக்தா, விவசாயிகள் பென்ஷன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அக்டோபர் 2-ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்க உள்ளார்.
ஊழல் எதிர்ப்பு போராளியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே (80), லோக்பால் தேர்வுக்குழு நியமனம் மற்றும் லோக் ஆயுக்தா நீதிமன்றம் அமைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவரிடம் பேசிய மத்திய அரசு, ஹசாரேவின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவோம் என உறுதியளித்தது. இதைத்தொடர்ந்து மார்ச் 29-ம் தேதி தனது போராட்டத்தை அவர் வாபஸ் பெற்றார். ஆனால் இந்த கோரிக்கைகளை மத்திய அரசு இன்னும் நிறைவேற்றவில்லை.
இந்நிலையில், விவசாயிகள் பென்ஷன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 2-ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லோக்பால் அமைப்பிற்கு உரிய அலுவலர்களை நியமிக்க வேண்டும், விவசாயத் துறையில் எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், விவசாயிகளுக்கு மாதம் தோறும் ரூ.5 ஆயிரம் பென்ஷன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டம் மராட்டிய மாநிலம் அகமது நகரில் உள்ள தனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் நடக்கும் என தெரிவித்துள்ளார்.