எட்டுத்திக்கும் வலுப்பெறும் தமிழர் போராட்டம்

458 0

தமிழின அழிப்புக்கு பரிகார நீதியை வேண்டி பிரித்தானியாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் 3 வது நாளாக இன்றைய தினம் நெதர்லாந்தில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை வந்தடைந்தது. ஈருருளிப்பயணத்தை முன்னெடுக்கும் மனிதநேய பணியாளர்களை நெதர்லாந்து செயற்பாட்டாளர்கள் வரவேற்று அவர்களுக்கான ஆதரவை வழங்கினார்கள். அத்தோடு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கான மனுவை காவல் உயர் அதிகாரிகளின் ஊடாக வழங்கப்பட்டது. நெதர்லாந்து வெளிவிவகார அமைச்சர் மனிதநேய பணியாளர்களை நேரடியாக சந்திப்பதற்கு வாய்ப்பு இல்லாத வேளையிலும் மின்னஞ்சல் ஊடாக இவ்வாறான மனித நேய பணிக்கு தனது வாழ்த்துக்களை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

ஐநா நோக்கிய தொடரும் பயணத்தில் இன்றைய தினம் மேலதிகமாக நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் நாட்டு தமிழ் இளையோர்களும் கலந்துகொண்டனர்.

இன்றைய தினம் 03.09.2018 திங்கள் மறுமுனையில் பிரான்சு பாரிசிலிருந்து தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஈருருளிப் பயணப்போராட்டம் பாரிசின் புறநகர் பகுதியில் ஆர்ஜெந்தே மாநகரில் அமைக்கப்பட்ட தியாக தீபம் லெப்.கேணல். திலீபன் நினைவுக்கல் முன்பாக ஆரம்பித்துள்ளது.

மாவீர் குடும்பத்தை சேர்ந்த பிரான்சு த.ஒ.குழுப் பொறுப்பாளர் திரு. மகேஸ் ஏற்றி வைக்க ஆர்ஜெந்தே தமிழ்ச்சங்க தலைவர் மலர் வணக்கம் செய்து, அக வணக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஈருருளி பயணப்போராட்ட செயற்பாட்டாளர்கள் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தி, உறுதி மொழியுடன் நாடாளுமன்றம் நோக்கி பயணமானார்கள்.

மத்திய நேரம் பாரிசிலிருந்து ஈருருளி பயணம் இவிறி சூ சென் என்ற இடத்தை சென்றடைந்தது. அங்கு மாநகர முதல்வர் மற்றும் உதவி முதல்வர், ஏனைய பகுதிக்கு பொறுப்பானவர் மனிதநேய பணியாளர்களை அழைத்து ஆர்வத்துடன் வந்து பேசியதுடன் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.

இச் சந்திப்பில் பின்வரும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

1.பல தசாப்தங்களாக,இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பங் கீ மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

2.ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படைகள் முற்றுமுழுதாக வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.

3.இலங்கைத் தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.

4.கருத்து வெளிப்பாட்டு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

5.மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மனித நேய ஈருருளிப் பயணம் சென்ற வழிகளில் வேற்றின மக்களுக்கு தமிழின அழிப்பை எடுத்துரைத்ததோடு துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

ஐநா மனிதவுரிமை பேரவையின் அமர்வை முன்னிட்டு எதிர்வரும் 17.09.2018 அன்று ஜெனிவா மாநகரத்தில் நடைபெறும் மாபெரும் பொங்குதமிழ் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு மனிதநேய பணியாளர்கள் உரிமையுடன் வேண்டிக்கொள்கின்றார்கள்.

எதிர்வரும் 14.09.2018 அன்று கனடா தேசத்திலும் “எமது நிலம் எமக்கு வேண்டும்” எனும் மாபெரும் கவனயீர்ப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment