ஈழத்தமிழர்களின் இன அழிப்புக்கு நீதி கோரி கடந்த 2 நாட்களாக நடைபெறும் ஐநா நோக்கிய நீதிக்கான ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் மாலை நேரம் Harwich துறைமுகத்தை சென்றடைந்தது. அங்கிருந்து கப்பல் ஊடாக இன்று காலை நெதர்லாந்து Den Haag துறைமுகத்தை சென்றடைய உள்ளது. நேற்றைய பயணத்தில் தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதோடு தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் கண்காட்சிப்படங்களையும் கவனயீர்ப்பு நிகழ்வுகளில் தாங்கியவண்ணம் மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் ஈடுபட்டனர்.
தமிழ் மக்களுக்கான தீர்வு தமிழீழமே எனும் உறுதியோடு ஈருருளிப்பயணத்தை மேற்கொள்ளும் மனிதநேயசெயற்பாட்டாளர்கள் மிகுந்த வலிமையோடு சர்வதேச அரசியல் முச்சந்தி நோக்கி பயணிக்கின்றனர். தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி மேற்கொள்ளப்படும் ஈருருளிப்பயணம் தொடர்ந்து இன்றைய தினம் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை நோக்கி செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 17.09.2018 திங்கள் கிழமை ஐநா முன்றலில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் நடைபெற இருக்கும் மாபெரும் பேரணியில் அனைத்து மக்களையும் கலந்துகொண்டு வலுச்சேர்க்குமாறு உரிமையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.