மாவட்ட தலைநகரங்களில் நடந்த, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாக்களில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளை செயல்படுத்த, நிதி பெறும் நடவடிக்கை களை, தமிழக அரசு துவக்கியுள்ளது.தமிழகத்தில், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா, 2017ல், கொண்டாடப்பட்டது.
உதவிகள் : அப்போது, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், அரசு சார்பில் விழாக்கள் நடத்தப் பட்டன. பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. அத்துடன், மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை செயல்படுத்தும் விதமாக, அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. மாவட்டம் சார்ந்த திட்டங்கள் மட்டுமின்றி, துறை ரீதியாக முக்கியத்துவம் அளிக்க வேண்டிய, பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களும், அதில் இடம் பெற்றிருந்தன.தலைமை செயலரின் தொடர் கண்காணிப்பு காரணமாக, பல திட்டங்களுக்கு, நிர்வாக ரீதியாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. உள்கட்டமைப்பு சார்ந்த சில திட்டங்கள் மட்டும், நிதி ஆதாரமின்றி தாமதமாகியுள்ளன.
இது குறித்து, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் சமீபத்தில் நடந்த, உயர் நிலை கூட்டத்தில், ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாக்களில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், 28 திட்டங்கள் நடவடிக்கை யின்றி, நிலுவையில் இருப்பது தெரிய வந்து உள்ளது.
நபார்டு : அதில், 26 திட்டங்களுக்கு, ‘நபார்டு’ எனப்படும், தேசிய வேளாண் மற்றும் கிராம மேம்பாடு வங்கி வாயிலாகவும், இரண்டு திட்டங் களுக்கு, நிதித்துறை வாயிலாகவும், நிதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நிதி ஆதாரம் கிடைத்த பிறகே, பணிகளை மேற்கொள்ள முடியும் என, தெரியவந்துள்ளது. இத்திட்டங்களுக்கு உரிய நிதியை விரைந்து பெற்று, பணிகளை முடிக்க, துறை செயலர்களுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.