ஹிந்து இயக்க தலைவர்களை கொலை செய்யும் திட்டத்துடன், கோவை வந்த, ஐந்து பேர் கும்பலை, போலீசார் கைது செய்தனர். கோவையைச் சேர்ந்த, சில ஹிந்து இயக்க தலைவர்களை கொலை செய்யும் திட்டத்துடன், சென்னையில் இருந்து சிலர், ரயிலில் கோவை வருவதாக, மத்திய புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று முன்தினம், சென்னையில் இருந்து கோவை வந்த ரயிலில் பயணம் செய்தவர்களை போலீசார் கண்காணித்தனர்.ரகசிய தகவலின்படி, சென்னையைச் சேர்ந்த, ஜாபர் சாதிக் அலி, 29, சம்சுதீன், 20, சலாவுதீன், 25; திண்டிவனத்தைச் சேர்ந்த இஸ்மாயில், 25, மற்றும் இவர்களை அழைத்து செல்ல வந்திருந்த, ஆசிக் ஆகியோரை பிடித்து, விசாரணை நடத்தினர்.
இதில், குண்டு வெடிப்பு கைதியின் திருமணத்துக்காக, கோவை வந்ததாக தெரிவித்துள்ளனர்.இவர்கள், ஹிந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர், அர்ஜுன் சம்பத், ஹிந்து முன்னணி பேச்சாளர், மூகாம்பிகை மணி, சக்தி சேனா அமைப்பு தலைவர், அன்புமாரி போன்ற, ஹிந்து இயக்க நிர்வாகிகளுக்கு எதிராக, ‘பேஸ்புக்’கில் கருத்து தெரிவித்து, கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.
ஹிந்து இயக்க தலைவர்களில் யாரேனும் ஒருவரை கொலை செய்யும் நோக்கத்தில், கோவை வந்தது தெரிந்தது. இவர்களிடம், இரவு முழுவதும் போலீசார் விசாரணை நடத்தினர்.
பின், சதி திட்டம் தீட்டுவது, அரசுக்கும், பொதுமக்களுக்கும் பிரச்னை ஏற்படுத்தி, மத கலவரத்தை துாண்டும் வகையில் செயல்படுவது போன்ற பிரிவுகளில் வழக்கு பதிந்து, ஐந்து பேரையும் கைது செய்தனர்.மேலும், அர்ஜுன் சம்பத், மூகாம்பிகை மணி மற்றும் சில ஹிந்து இயக்க நிர்வாகிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு முன், கோவையை சேர்ந்த, ஒரு ஹிந்து இயக்க நிர்வாகியை கொல்ல சதி திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது.
போலீசாரின் நடவடிக்கையால், சதி முறியடிக்கப்பட்டு உள்ளது. சதி திட்டத்துக்கு, வேறு யாரெல்லாம் உடந்தை என்பது குறித்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.