மெகுல் சோக்சியின் சொத்துகளை முடக்கும் நடவடிக்கை தொடரும்

268 0

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி வழக்கு தொடர்பாக மெகுல் சோக்சியின் சொத்துகளை முடக்கும் நடவடிக்கை தொடரும் என நிதி மோசடி தடுப்பு சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினரும், தொழிலதிபருமான மெகுல் சோக்சி ஆகியோர் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அமைப்புகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இதில் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.) கீழ் இருவரின் சொத்துகளையும் அமலாக்கத்துறை முடக்கி வருகிறது. இதில் மெகுல் சோக்சியின் அடுக்குமாடி வீடுகள், அலுவலகங்கள், நிலம் என ரூ.1,210 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இந்த நடவடிக்கையை பி.எம்.எல்.ஏ. ஆணையம் விசாரித்தது.

இதில் அமலாக்கத்துறை அளித்த சான்றுகள் மற்றும் விண்ணப்பங்களை பரிசீலித்த இந்த ஆணையம், முடக்கப்பட்ட மெகுல் சோக்சியின் சொத்துகள் அனைத்தும் பணமோசடி சொத்துகள் தான் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்து உள்ளது. எனவே இந்த முடக்க நடவடிக்கை தொடர வேண்டும் என உத்தரவிடுவதாகவும் ஆணையம் அறிவித்தது.

மெகுல் சோக்சியின் முடக்கப்பட்ட சொத்துகளில், விழுப்புரத்தில் உள்ள நிலமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment