புஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் தற்கொலை செய்துகொண்ட கைதியின் உடல் அடக்கம் 

340 0

nuwara-eliya

நுவரெலியா ஹட்டன் புஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படும் கைதியின் இறுதிச்சடங்கு இன்று மாலை புஸ்ஸல்லாவ ரொத்சைல்ட் தோட்ட பொதுமயானத்தில் இடம்பெற்றது.
புஸ்ஸல்லாவ ரொத்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நடராஜா ரவிசந்திரன் என்ற இளைஞன் குற்றச்செயல் ஒன்றின் காரணமாக கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
பின்னர் நீதிமன்றத்தினால், குறித்த நபர் சமூகசேவைக்கு உள்வாங்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு சமூகமாகாத நிலையில் ஹெல்பொட நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கபட்டிருந்தது.
இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட நபர் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் தூக்கில் தொங்கியநிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்தநபர், புஸ்ஸல்லாவ வகுகவ்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்ததைத் தொடர்ந்து நேற்று புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் பாரிய பதற்றநிலை தோன்றியது.
இந்நிலையில் ஸ்தலத்திற்கு விஜயம் செய்த கம்பளை பதில் நீதவான் சம்பவம் இடம்பெற்ற பொலிஸ் நிலையத்திற்கும், வைத்தியசாலை பிரேத அறைக்கும் சென்று பிரேதத்தை பேராதெனிய சட்டவைத்திய நிலையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்புமாறு பணித்திருந்தார்.
இறந்தவரின் உடற்பாகங்கள் கொழும்பிற்கு அனுப்பியதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் நேற்றிரவு கையளிக்கப்பட்டது.
இதேவேளை, நடைபெற்றது தற்கொலை அல்ல கொலை என்றும், அதற்கு நியாயமான நீதி கிடைக்க வேண்டும் என்றும்; இதனால் குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறும், கோரி பிரதேசவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.