வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. இதுதொடர்பாக தேர்தல் அதிகாரி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கிறது.
இந்த பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். வாக்காளர்கள் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா? பெயர், முகவரி, வயது போன்ற விவரங்கள் சரிதானா? என்பதையெல்லாம் சரிபார்த்து திருத்திக்கொள்ள இது வாய்ப்பாக அமைகிறது.
வருகிற ஜனவரி 1-ந் தேதியன்று 18 வயதை பூர்த்தி செய்யும் புதிய வாக்காளர்களும், வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். அதோடு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வாங்குவதற்கும் இந்த காலகட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும். பின்னர் ஜனவரி 1-ந்தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
சுருக்கமுறை திருத்தப்பணிகள் நடக்கும் நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதுண்டு. ஆனால் இந்த முகாம் கள் குறித்து இன்னும் முடிவாகவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூட்டியுள்ளார். வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்த கருத்துக்களை கட்சி பிரதிநிதிகள் தெரிவிப்பார்கள்.