கமல்ஹாசன் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை – அமைச்சர் ஜெயக்குமார்

270 0

நடிகர் கமல்ஹாசன் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். 

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

இரட்டை வேடம் போடுவது தி.மு.க.வின் வழக்கம். நினைவேந்தல் கூட்டத்துக்கு அமித்ஷாவுக்கு அழைப்பு விடுத்தது காங்கிரஸ் கட்சிக்கு எச்சரிக்கை என்றுகூட சொல்லலாம். இதுபற்றி காங்கிரஸ் தான் கவனமாக இருக்க வேண்டும். கூட்டணி மாறுவதற்கு வசதியாக தி.மு.க. திட்டம் வகுத்துக்கொள்ளும் என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது.

ஆனால் நாங்கள் எதிர்க்க வேண்டியதை எதிர்ப்போம், ஆதரிக்க வேண்டியதை ஆதரிப்போம். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பது தான் அ.தி.மு.க.வின் கொள்கை.

அரசியல் என்பது மிகப்பெரிய சமுத்திரம். இதில் யார் வேண்டுமென்றாலும் டம்ளரில் தண்ணீர் எடுத்து குடிக்கலாம். அதில் நடிகர் விஷால் தண்ணீர் எடுத்து குடிப்பதற்கு நாங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும். ஆட்சியாளர்கள் எதுவும் செய்யவில்லை என்று சொல்ல நடிகர் விஷால் அதிகாரம் பெற்றவர் கிடையாது.

தேர்தல் வரும்போது நல்ல திட்டங்களை தந்த எங்களை தான் மக்கள் ஆதரிப்பார்கள். எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றிபெறும். நடிகர் கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடுவோம் என்று சொன்னால் அது விஷயம். போட்டியிடவில்லை என்று சொன்னால் விஷயமே இல்லை. தேர்தல் என்றால் கமல்ஹாசனுக்கு பயம். எந்த தேர்தலிலும் அவர் போட்டியிடப்போவதில்லை.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே கோஷ்டி மோதல் என்பது கற்பனையான கதை. அவர்கள் கட்சியின் நிர்வாகிகளை சந்திப்பது வழக்கமான ஒன்று. அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் செயல்படுகின்றனர்.

லண்டன் ஓட்டல் விவகார வழக்கில் இருந்து விடுவிக்க தி.மு.க. தலைவரிடம் கொஞ்சியது யார்? இதை உணர்ந்து தான் ஜெயலலிதா வீட்டு பக்கம் வரக்கூடாது என்று டி.டி.வி.தினகரனை விரட்டி அடித்தார். தி.மு.க.வுடன் உறவு வைத்துக்கொண்டு இருந்தவர் டி.டி.வி.தினகரன்.

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அ.தி.மு.க. பணியை தொடங்கும். மக்களுடன் தொடர்பில்லாதவர்கள் தான் வேலைகளை இப்போதே தொடங்கிவிடுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment