யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் “புனிதம் காப்போம்” என மும்மொழிகளில் எழுதப்பட்டு கட்டப்பட்டு இருந்த பதாகைகளை இனம் தெரியாத நபர்கள் அறுத்து சென்றுள்ளனர்.
நல்லூர் மகோற்சவம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இக்கால பகுதியில் , நினைவாலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் அப்பகுதியில் புனிதத் தன்மைகள் கெடாதவாறு நடந்துகொள்ளும்படி நினைவாலயத்தில் மும்மொழிகளிலும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபனின் பங்களிப்பில் பதாகைகள் நேற்று புதன்கிழமை இரவு கட்டப்பட்டிடிருந்தன.
அவற்றினை இன்று வியாழக்கிழமை (பதாகை கட்டி ஒரு சில மணிநேரத்தில்) அதிகாலை 1.32 மணிக்கு இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் பாதுகாப்புடன் வந்த இரு சிவில் உடை தரித்த நபர்கள் கட்டப்பட்டிருந்த பதாகைகளை அறுத்துக்கொண்டு தமது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். குறித்த சம்பவமானது நல்லூர் ஆலய சூழலில் பூட்டப்பட்டு உள்ள சி.சி.ரி.வி. கமராக்களில் பதிவாகியுள்ளன.
அதேவேளை கடந்த 14 ஆம் திகதி மாநகர சபை பணியாளர்கள் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு சிவில் உடையில் வந்தவர்கள் தம்மை இராணுவ புலனாய்வாளர்கள் என அறிமுகப்படுத்திக்கொண்டு, பணியாளர்களை “வெளியில் சந்தோஷமாக வாழ ஆசையில்லையா? “ , “பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா? “ என பணியாளர்களை கேட்டு அச்சுறுத்தியிருந்தனர்.
அதனால் அச்சமடைந்த பணியாளர்கள், வேலி அடைக்கும் வேலையை கைவிட்டு அலுவலகம் திரும்பியவுடன், தாம் அந்த பணியில் ஈடுபடமாட்டோம் என தெரிவித்தனர். அதனால் , வேலி அடைக்கும் மிகுதி பணிகளை வெளியில் இருந்து தற்காலிக வேலைக்கு பணியாளர்களை அமர்த்தி பூரணப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.