ஜெர்மனியில் அகதிகளுக்கு எதிராக போராட்டம்- வன்முறையில் பலர் காயம்

283 0

ஜெர்மனியில் அகதிகளுக்கு எதிராகவும், ஆதரவாகவும் நடைபெற்ற போட்டி போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இதில் பலர் காயமடைந்துள்ளனர்.

உள்நாட்டு போர் நடைபெறும் சிரியா மற்றும் ஈராக்கில் இருந்து ஏராளமானோர் வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

கடந்த 2015-ம் ஆண்டில் 13 லட்சம் பேர் அகதிகளாக குடியேறினர். தொடர்ந்து பலர் அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். இவர்களுக்கு பிரதமர் ஏஞ்சலா மெர்கல் அரசு ஆதரவு அளித்து வருகிறது. அகதிகள் வருகைக்கும், இங்கு அவர்கள் தங்குவதற்கும் வலதுசாரி அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கிழக்கு ஜெர்மனியின் செமின்ட்ஷ் நகரில் நடந்த மோதலில் ஜெர்மனைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக ஈராக் மற்றும் சிரியாவைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

அதைதொடர்ந்து அகதிகளுக்கு எதிராக செமின்ட்ஷ் நகரில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின்போது வெளிநாட்டினர் விரட்டியடிக்கப்பட்டனர். போராட்டத்தை அடக்க போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். அப்போது முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள் போலீசார் மீது கல்வீசி தாக்கினார்கள். அதேசமயம் மற்றொரு குழுவினர் எதிர்போராட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. பாட்டில்கள் மற்றும் பட்டாசுகளை வெடிக்கச் செய்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

கல்வீச்சு மற்றும் வன்முறை சம்பவங்களில் பலர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்துக்கு பிரதமர் ஏஞ்சலா மெர்கெலின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் சிபெர்ட் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a comment