ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து பாரிய கண்டனப் பேரணியொன்றை நடத்தத் தீர்மானித்துள்ளனர்.
ஓகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச ரீதியில் அனுட்டிக்கப்பட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு அன்றைய தினம் இந்த பேரணியை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பு அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்காவில் மூன்று தசாப்த காலமாக நீடித்த யுத்தத்தின் இறுதி நாட்களில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய சரணடைந்த மற்றும் உறவினர்களால் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடிக் க்டுபிடித்தத் தருமாறும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியத்தருமாறும் வலியுறுத்தி உறவினர்கள் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும் இதுவரை ஸ்ரீலங்கா அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காது தொடர்ச்சியாக உதாசீனமாக செயற்பட்டுவருவதாக குற்றம்சாட்டிவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமது பிரச்சனைகளை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துரைப்பதற்காக முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் நிரந்தர அலுவலகங்களை நிறுவியுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஸ்ரீலங்கா அரசினால் காணாமல் போனோர் அலுவலகம் என்ற பெயரில் அலுவலகம் ஒன்று நிறுவப்பட்டுள்ள நிலையிலேயே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமக்கென இந்த அலுவலகங்களை மாவட்ட ரீதியில் நிறுவியிருக்கின்றனர்.
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் காணாமல் போனோர் அலுவலகம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் ஒரு செயற்பாடு என தொடர்ச்சியாக குற்றம்சாட்டிவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் தமக்கான நீதி பெற்றுக்கொடுக்கப்படும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் கூறுகின்றனர்.
இதனாலேயே தமக்கான நீதியை சர்வதேச சமூகமே தலையிட்டுப் பெற்றுத் தர வேண்டுமென வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருப்பதாக ஓகஸ்ட் 28 ஆம் திகதியான இன்றைய தினம் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டடோரது உறவினர்களின் அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டடோர் தினம் அனுட்டிக்கப்படும் ஓகஸ்ட் 30 ஆம் திகதியான நாளை மறுதினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள இந்த பேரணியில் வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டடோர் தொடர்பான விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் மெத்தனப்போக்குகளை கண்டித்தும் ஜெனீவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி இடம்பெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடரில் சர்வதேசம் விரைந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்க்கமான தீர்வினை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியுமே இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவிக்கின்றார்.
தமிழர் தாயகமான வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள இந்த கவனயீர்ப்புப் பேரணி அம்பாறை மாவட்டத்தின் தம்பிலுவில் மத்திய கல்லுரி முதல் திருக்கோயில் மணிக்கூட்டுக் கோபுரம் வரை நடைபெறவுள்ளது.