வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் நேற்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர். எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனின் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளடங்கலான அனைத்து மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளமையினால் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லை என்பதோடு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களும் இக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பினை இக்கூட்டத்திற்கு அழைத்தமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த இரா சம்பந்தன், சில அடிப்படையான விடயங்கள் தொடர்பில் தமது கருத்துக்களை தெரிவிக்க விரும்புவதாகவும் கூறினார்.
வடக்கு கிழக்கிலுள்ள 18 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் 16 உறுப்பினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சார்ந்தவர்கள் எனவும், வடக்கு கிழக்கிலுள்ள ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளினதும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் விட தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிக பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளதனையும் சுட்டிக்காட்டிய அதேவேளை, வடக்கு கிழக்கு மக்களினது ஜனநாயக தீர்ப்பிற்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் தமிழ் மக்கள் யுத்தத்தின் அழிவுகளால் மிகவும் பாதகமான விளைவுகளை சந்தித்துள்ளார்கள் என்பதனையும் எடுத்துக் கூறினார்.
இதன்போது ஜனாதிபதி தனது அரசாங்கம் பதவி ஏற்றதன் பின்னர் இராணுவத்தின் வசமிருந்த 88 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
ஆனால் யுத்தம் நிறைவடைந்து 9 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் வாழ்ந்த பயிர் செய்த நிலங்கள் இன்னமும் இராணுவத்தின் வசம் இருப்பதனை எடுத்துக்காட்டிய இரா சம்பந்தன் இதற்கு சிறந்த உதாரணம் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கேப்பாபிலவு, இங்கே, பரம்பரை பரம்பரையாக நூற்றாண்டு காலமாக மக்கள் வாழ்ந்து வந்த 75 ஏக்கர் காணி இன்னமும் இராணுவத்தின் வசம் இருப்பதனை சுட்டிக்காட்டினார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடனும் இராணுவ தலைமைபீடங்களுடனும் பல தடவைகள் கலந்துரையாடியுள்ளமையையும் இரா சம்பந்தன் எடுத்துரைத்தார்.
மேலும் நாட்டில் நல்லிணக்கமும் தேசிய ஒருமைப்பாடும் ஏற்படவேண்டுமேயானால் இராணுவத்தின் வசமுள்ள அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என இரா. சம்பந்தன் வலியுறுத்தினார்.
மேலும், தேசிய நல்லிணக்கத்தினையும் ஒருமைப்பாட்டினையும் ஏற்படுத்த தேசிய பிரச்சினைக்கு புதிய அரசியல் யாப்பினூடாக அரசியல் தீர்வொன்றினை காண்பது அத்தியாவசியமான ஒன்றாகும் என்பதனை வலியுறுத்திய இரா சம்பந்தன், தேசிய பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு எட்டப்படும் வரையில் நல்லிணக்கத்தினையோ தேசிய ஒருமைப்பாட்டினையோ ஏற்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.