ஆட்களைப்பதிவு செய்து அடையாள அட்டைகளை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணங்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதியிலிருந்து திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிய திருத்தத்திற்கு அமைவாக, 15 வயது பூர்த்தியடைந்து முதற்தடவையாக பதிவுசெய்து தேசிய அடையாள அட்டையினை பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பத்திற்கு ரூபா 100, தேசிய அடையாள அட்டையொன்றின் திருத்திய இணைப்பிரதியொன்றிற்கு ரூபா 250 மற்றும் காணாமல் போன தேசிய அடையாள அட்டையொன்றின் இணைப்பிரதியொன்றிற்காக ரூபா 500 ஆக கட்டணங்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
பிரதேச செயலகத்தினூடாக அல்லது கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திலோ கட்டணங்களை செலுத்தி பெறப்பட்ட பற்றுச்சீட்டினை விண்ணப்பத்தின் உரிய பகுதியில் இணைத்து ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும் வறுமையின் காரணமாக பணம் செலுத்த முடியாத விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த முடியாமைக்கான காரணத்தை பிரதேச செயலாளரிடமிருந்து பெறப்பட்ட கட்டணம் செலுத்துவதிலிருந்து விடுவிக்கும் உரிய சான்றிதழினை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பவேண்டும். இது தொடர்பான மேலதிக தகவல்களை கிராம உத்தியோகத்தர் அல்லது பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்று ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.