உலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்! -அஞ்சலி செலுத்துவதா?! – காத்திருப்பதா?!

619 0

உலகம் முழுவதும் காணாமல் ஆக்கப்பட்டோர் பல்லாயிரக் கணக்கானோர் , அவர்கள் பற்றிய தகவல்களுக்காக காத்துக்கொண்டிருக்கும் அவர்களது உறவினர்களின் துயரம் குறித்த கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த தினம் ஒகஸ்ட் 30 ஆம் நாள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

உலகில் ஆக்கிரமிப்பாளர்களின் இரும்புக்கரங்களால் காணமல் ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கை எத்தனை என எவருக்கும் சரியாக தெரியாது. ஆனால், இந்த எண்ணிக்கை லட்சக்களையும் கடந்து இருக்கும் என்று நம்பப்படுகின்றது. அதுவும் உண்மையே.

உலகில் காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஒகஸ்ட் 30 ஆம்நாள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஏதாவது நிகழ்வை மேற்கொள்வது வழமையாகும். ஆனால் தமிமீழத்தில் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் குறிப்பாக தாய்மார்கள் தினம் தினம் கண்ணீரோடு கவயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரிய போராட்டமானது கடந்த ஒரு வருடமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

கண்துடைப்புக்காக அரசியல் தலைவர்கள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்று காற்றில் கரைந்து செல்லும் வாக்குறுதிகளை வழங்கி செல்லவும் தவறுவதில்லை.

தொடர்ச்சியாக போராட்டம் நடத்தும் உறவுகளில் ஐந்துக்கு மேற்பட்டோர் இறந்தும் விட்டனர், பல உறவுகள் நோயின் பிடியில் சிக்கி தவிக்கின்றார்கள். அவர்களும் எம்மிடம் இருந்து எப்போது காணாமல் போவார்களோ இயற்கையின் விதியின் படி .

எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக முன்றலில் முன்னெடுக்கவுள்ள பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து உறவுகளும் கைகோருங்கள்.இது நமக்கான கடமை.

காணாமல் ஆக்கப்பட்டோரில் குறிப்பாக இறுதி வன்னி யுத்தத்தில் உறவுகள் முன்னிலையில் கைதானவர்கள், சிறிலங்கா இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டோகள் ,சரணடைந்தவர்கள் எங்கே? உயிருடன் இருக்கிறார்களா? அல்லது உயிரோடு இல்லையா என்பது தெரியாமல் தவிக்கும் உறவுகள். அவர்கள் இல்லை என அஞ்சலி செலுத்துவதா? இல்லை மீண்டு வருவார்கள் என காத்திருப்பதா?

Leave a comment