சென்னையில் இன்று நடைபெறும் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து, அக்கட்சியில் தலைவர் பதவி காலியானது. இந்த பதவிக்கும், செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இவர்கள் 2 பேரை தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் 2 பேரும் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக முறைப்படி இன்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிக்கிறார்.
பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஏற்கனவே அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது. தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் கட்சியின் பதிவேட்டில் கையெழுத்திடுகிறார்.
அதேபோல் பொருளாளராக பதவி ஏற்கும் துரைமுருகனும் கட்சியின் பதிவேட்டில் கையெழுத்திடுவார். இந்த கூட்டத்துக்கு பின்னர் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.
அதனைத்தொடர்ந்து தி.மு.க.வின் 2-வது தலைவராக பதவி ஏற்கும் மு.க.ஸ்டாலின் தொண்டர்கள் மத்தியில் எழுச்சி உரையாற்றுகிறார். முக்கிய பிரபலங்கள் சிலரும் நேரில் வந்து அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்கள். பொதுக்குழு கூட்டத்துக்கு பின்னர் மு.க.ஸ்டாலின் அண்ணா நினைவிடம், கருணாநிதி சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளார்.
பொதுக்குழு கூட்டத்தையொட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கலைஞர் அரங்கத்தின் முன்பு இரு புறங்களிலும் சாமியானா பந்தல் போடப்பட்டு உள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகளை தொண்டர்கள் வெளியில் இருந்தே பார்க்கும் வகையில் அங்கு டெலிவிஷன்கள் வைக்கப்பட உள்ளன. பொதுக்குழு கூட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி 11 மணி வரை நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. நிருபர்களிடம் கூறும்போது, “நாளை (இன்று) நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் முதலில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதன் பின்னர் தணிக்கை குழு அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதனைத்தொடர்ந்து தலைவர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் முடிவுகளை பொதுச்செயலாளர் அறிவிப்பார்” என்றார்.