விழுப்புரம் மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை! -மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி!

286 0

விழுப்புரம் மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரும் மனுவை ஐகோர்ட்டு நிராகரித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

விழுப்புரத்தை சேர்ந்த வக்கீல் வி.ஜெயகுமார் என்பவர், தமிழ்நாட்டில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையை விழுப்புரத்தில் அமைக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்த மனுவை கடந்த ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து வி.ஜெயகுமார் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஏப்ரல் மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் 1,490 வருவாய் கிராமங்கள், 13 தாலுகாக்கள், 22 ஒன்றியங்கள், 5 நகர பஞ்சாயத்துகள், 3 நகராட்சிகள் உள்ளன. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர் இந்த மாவட்டத்தில் அதிகமாக வசிக்கின்றனர். தமிழ்நாட்டிலேயே கிராமப்புறத்தில் வசிக்கும் மக்களின் விகிதாச்சாரம் அதிகமாக கொண்ட மிகப்பெரிய மாவட்டம் இது. மேலும் இந்த மாவட்டத்தில் விபத்துகளும் மிகவும் அதிக அளவில் நடைபெறுகின்றன.

இந்த நிலையில் இந்த மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது மிகவும் சரியாக இருக்கும் என்று கோரும் மனுவை சென்னை ஐகோர்ட்டு சரியாக விசாரிக்க தவறி உள்ளது. எனவே சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், இந்த மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கது அல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Leave a comment