நாட்டின் தேர்தல் முறைமையில் காணப்பட்ட ஊழலுக்கு முடிவு கட்டி, சுதந்திரமும் நீதியானதுமான தேர்தல் முறைமையை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு கலதாரி ஹோட்டலில் இன்று இடம்பெற்ற ஆசிய தேர்தல் பங்குதாரர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
2015 ஜனவரி 08 ஆம் திகதிக்கு முன்னர் இந்நாட்டில் இருந்து வந்த தேர்தல் முறைமையில் காணப்பட்ட ஊழல் நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அரசியல் அமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக நாட்டில் சுதந்திரமும் நீதியானதுமான தேர்தலுக்கு பலமானதொரு அடித்தளத்தை இடுவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்று இலங்கை பலமான ஜனநாயக அடிப்படையை கொண்ட நாடாகவும் நீதித்துறை பக்கசார்பற்றதாகவும் நீதி பலப்படுத்தப்பட்ட நாடாகவும் காணப்படுவதுடன் ஆசிய நாடுகளின் புதிய அறிக்கையின் படி இலங்கை நீதித்துறையில் பக்கசார்பின்மை தொடர்பில் உயர்ந்த நிலையிலும் உள்ளது.
கடந்த மூன்றரை வருட காலப்பகுதியில் நாட்டில் ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்காக அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதுடன், மக்களின் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை பலப்படுத்துவதற்கும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.