மேல் மாகாண சபையானது கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தனது உறுப்பினர்களுக்காக ஆடம்பரக் கதிரைகளை இறக்குமதி செய்வதற்காக 86 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.
ஒரு பெல்ஜிய விநியோகஸ்தரிடமிருந்து ஒவ்வொன்றும் தலா 640,000 ரூபா பெறுமதியுடைய 135 கதிரைகளை இறக்குமதி செய்வதற்கு ஆணையொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மேற்படி சபையின் தலைமைச் செயலாளர் பிரதீப் யஸரத்ன கூறினார்.
மேல் மாகாண சபையில் 104 உறுப்பினர்களே உள்ள நிலையில் கதிரைகள் தேவைப்பாட்டிலும் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தக் கதிரையொன்றின் உண்மையான விலை 200,000 ரூபாவாக மட்டுமே உள்ள நிலையில் சுங்க வரி, கப்பல் போக்குவரத்துக்கான செலவு, பெறுமதி கூட்டப்பட்ட வரிகள் என்பன காரணமாகவே அவற்றுக்கு அதிக விலையைச் செலுத்த நேரிடுவதாக யஸரத்ன கூறினார்.
அந்தக் கதிரைகள் கொண்டுள்ள அம்சங்கள் மற்றும் தேவைப்படும் மாற்றங்கள் என்பன குறித்து மேல் மாகாண சபை மதிப்பீடொன்றை மேற்கொண்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் கதிரைகளையொத்த மேற்படி கதிரைகளை 360 பாகைக்குத் திருப்பவும் நகர்த்தவும் முடியும் எனவும் அவை தேவைக்கேற்ப சீர்செய்யக் கூடியவை எனவும் கூறப்படுகிறது.
இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி மாகாண சபை உறுப்பினர் சுனில் வட்டகல தெரிவிக்கையில், அந்தச் சபையின் 8 உறுப்பினர்கள் மட்டுமே மேற்படி தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து உள்நாட்டில் கொள்வனவை மேற்கொள்ள யோசனையை முன்வைத்திருந்ததாகக் கூறினார்.
மேல் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார மேற்படி தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக முன்னர் தெரிவித்திருந்த நிலையில், சபையானது புதிய கதிரைகளைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய மாகாண சபைக் கட்டடமானது 4 பில்லியன் ரூபா செலவில் கடந்த மாதமே திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.