டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாக கமிட்டி தலைவர் மஞ்சித் சிங் அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வாழும் சீக்கியர்கள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை காலிஸ்தான் என்ற தனிநாடாக உருவாக்க வேண்டும் என பிரசார இயக்கம் நடத்தி வருகின்றனர். வரும் 2020-ம் ஆண்டுக்குள் தனி காலிஸ்தான் இலக்கை அடைய வேண்டும் என அவர்கள் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், சீக்கிய தலைமை குரு ‘குரு நானக்’கின் 550-வது பிறந்தநாள் விழாவை கோலாகலமாக நடத்த இந்தியாவில் உள்ள சீக்கிய அமைப்புகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
அவ்வகையில், அமெரிக்காவில் உள்ள சீக்கியர்களுடன் இதுதொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக டெல்லி சிக்கிய குருத்வாரா நிர்வாக கமிட்டி தலைவர் மஞ்சித் சிங் கலிபோர்னியா நகருக்கு நேற்று சென்றிருந்தார்.
அங்குள்ள யூபா சிட்டி என்ற இடத்தில் உள்ள சீக்கிய குருத்வாராவை பார்வையிட சென்றபோது, மஞ்சித் சிங்கை சூழ்ந்துகொண்ட சுமார் 30 காலிஸ்தான் ஆதரவாளர்கள் அவரை சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலில் அவரது தலைப்பாகை கழன்று கீழே விழுந்தது.
தன்னை கொல்லும் முயற்சியில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக மஞ்சித் சிங் குறிப்பிட்டுள்ள நிலையில் இந்த சம்பவத்துக்கு அமெரிக்காவில் உள்ள சீக்கியருக்கான நீதி என்னும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
முன்னதாக, வெளிநாட்டு ஏஜெண்டுகள் பதிவு சட்டத்தை மீறிய வகையில் செயல்பட்டு வரும் மஞ்சித் சிங் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்க வேண்டும் என சீக்கியருக்கான நீதி அமைப்பு அமெரிக்க அரசை வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.