அரசு பள்ளிகளுக்கு உதவிட முன்வாருங்கள்!

231 0

அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த சேவையை செய்திட, தாங்கள் விரும்பும் அரசு பள்ளிகளுக்கு உதவிட முன்வாருங்கள் என்று பொதுமக்களுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாணவர்கள் அனைவருக்கும் சிறந்த கல்வியைத் தந்து, அதன் மூலமாக அவர்களின் எதிர்காலத்தை, பிரகாசமான எதிர்காலமாக மாற்றுவதற்காக, மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா 14 வகையான பொருட்களை விலையில்லாமல் மாணவர்களுக்கு வழங்கி, பள்ளி கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டதால், மற்ற மாநிலங்களும், மத்திய அரசும் நம் மாநிலத்திற்கு நற்சான்று வழங்கிவரும் இவ்வேளையில், மேலும் முத்தாய்ப்பாக, தமிழகத்திலும், உலகத்தின் பல்வேறு இடங்களிலும் உள்ள முன்னாள் மாணவர்களும், அந்தந்த பகுதிகளில் உள்ள தொழில் அதிபர்கள் தங்கள் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் பள்ளிகளை தத்தெடுத்தும், இவர்களோடு பொதுமக்களும் கரம் கோர்த்து, தங்கள் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிக்கு, சேவை செய்திட வாருங்கள் என்று இருகரம்கூப்பி அழைக்கின்றேன்.

“கல்லாதவர்களே இல்லாத மாநிலமாய் தமிழகத்தை ஆக்க வேண்டும் – பள்ளி வகுப்பறைகள் புனிதமாக இருக்க வேண்டும்” என்பதை தாரக மந்திரமாக கொண்டு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் செயல்படும் அ.தி.மு.க. அரசு, பள்ளி கல்வித்துறைக்காக மட்டும் இந்த ஆண்டு ரூ.27,205 கோடியை ஒதுக்கீடு செய்து சாதனை படைத்து வருகிறது.

எவ்வளவுதான், அரசு நிதிகளை ஒதுக்கினாலும், என் பள்ளி இது என்ற எண்ணத்தை தன் இதயத்தில் ஏந்திய உங்களைப் போன்ற நல்லோரின் துணையும், அனைத்துப் பள்ளிகளையும் மேலும் மெருகூட்டிட வழிவகை செய்திடும்.

பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணைய வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை தாங்களாக மனமுவந்து செய்ய விரும்பினால், எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கல்வி ஒன்றால்தான் அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த சேவையை செய்திட முடியும். எனவே, அன்பு உள்ளமும், தர்ம சிந்தனையும் கொண்ட அனைவரும் தாங்கள் விரும்பும் பள்ளிகளுக்கு உதவிட முன்வாருங்கள் என்று அன்போடு மீண்டும் அழைக்கின்றேன்.

அரசின் பணியோடு, தங்களின் பங்களிப்பும் இணையும்போதுதான் கல்வியின் தரம் மேலும் சிறக்கும், வளம் பெறும். எனவே, அனைவரும் வாருங்கள் ஒன்று சேர்ந்து வளமிகு அரசுப் பள்ளிகளுக்கு மேலும் பலம் சேர்க்க கரம் கோர்த்து செயல்படுவோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a comment