இலங்கையின் விசேட அதிரடிப்படையின் தளபதிக்கு  எதிராக முன்னாள் இராணுவ தளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகா  முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளால் பெரும்பரபரப்பு எழுந்துள்ளது.

நாடாளுமன்ற உரையின்போது அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் வழங்கியுள்ள சுதந்திரத்தை சில பொலிஸ் அதிகாரிகள் தவறாக பயன்படுத்துகின்றனர் என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சைனா கடையில் புகுந்த எருமைமாடுகள் போல அவர்கள் நடந்துகொள்கின்றனர் எனவும் சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையின் தளபதியான  பிரதிபொலிஸ்மா அதிபர் லத்தீவ் உட்பட சில பொலிஸ் அதிகாரிகள் மீது அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்

லத்தீவ் சைனா கடையில் புகுந்த எருமை மாடு போன்று நடந்துகொள்கின்றார் அவர் எனது ஆதரவாளர்களான இளைஞர்களை  துன்புறுத்துகின்றார் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

களனியை சேர்ந்த எனது ஆதரவாளர் ஒருவரை போதைப்பொருள் வைத்திருந்தார் என்ற போலி குற்றச்சாட்டின் கீழ் பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் எனது ஆதரவாளரின் வீட்டை சோதனையிட்டனர் தங்களிற்கு தகவல் கிடைத்தது என தெரிவித்தே அவர்கள் சோதனையை மேற்கொண்டனர் எனவும்ச சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவர்களால் அந்த வீட்டிலிருந்து  எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை பின்னர் அந்த வீட்டிலிருந்து 80 மீற்றர் தொலைவில் உள்ள ஆற்றுகரையோரத்திலிருந்து கொக்கெய்னை மீட்டதாக தெரிவித்தனர்.

இதற்கு சில நாட்களி;ற்கு பின்னர் மீண்டும் அந்த வீட்டை மீண்டும் சோதனையிட்ட பொலிஸார் அந்த வீட்டில் குண்டுதயாரிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர், ஆனால் பழைய கைக்குண்டையே மீட்டுள்ளனர்.

எனது மற்றுமொரு ஆதரவாளர்  இயந்திரங்களை வாடகைக்கு விடுபவர் அவர் தன்னிடம் இயந்திரங்களை வாடகைக்கு பெறும் வாடிக்கையாளர்களின் அடையாள அட்டையை வாங்கி வைப்பது வழக்கம் இந்நிலையில் அவரிடம் பல அடையாள அட்டைகள் இருந்ததாக தெரிவித்து அவரை கைதுசெய்துள்ளனர் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளர்.

இந்த கைதுகள் அனைத்திற்கும் விசேட அதிரடிப்படையின்  தளபதி லத்தீவ் காரணம் எனவும் சரத்பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.

நான் இந்த விடயத்தை சட்டமொழுங்கு அமைச்சரின்  கவனத்திற்கு கொண்டு சென்றேன் அப்பாவிகளை துன்புறுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டேன் எனினும் லத்தீவ் தொடர்ந்தும் அப்பாவிகளை துன்புறுத்துகின்றார் எனவும்  சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

 

பொலிஸாரை ஒழுங்குடன் நடக்க செய்யாவிட்டால் நல்லாட்சி என கோசமிடுவதில் அர்த்தமில்லை எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.