வீட்டு வாசலுக்கு வருகிறது வங்கியின் சேவை!

443 0

இந்திய தபால் துறை மூலம் “இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் பாங்க்” என்ற வங்கி திட்டத்தை செப்டம்பர் 1-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். 

இந்தியாவில் தற்போது பெரும்பாலானோருக்கு வங்கிக் கணக்கு உள்ளது. வங்கிக் கணக்கு வைத்துள்ள அனைவருமே வங்கியில் போய்தான் பணம் எடுப்பது, பணம் போடுவது போன்றவற்றை செய்ய முடியும்.

வங்கிக்கு போனால், அரை நாள் பணிகள் அப்படியே கிடப்பில் கிடந்துவிடும். முதியவர்களும் அங்கு காத்துக்கிடக்கின்றனர். வங்கி விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய முடியாத பலர், உதவிக்காக யார் யாரையோ கெஞ்சியபடி உள்ளனர். இந்த அவலநிலையை கிராமங்களில் அதிகம் பார்க்கலாம்.

இதுபோன்ற அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இந்திய தபால்துறை அதிரடியாக தொடங்க இருக்கும் திட்டம்தான், இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கியாகும் (ஐ.பி.பி.பி.). இந்த வங்கியை செப்டம்பர் 1-ந் தேதியன்று டெல்லியில் இருந்தபடி நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்தியாவில் ஒரு லட்சத்து 55 ஆயிரம், தமிழகத்தில் 11 ஆயிரத்து 745 தபால் நிலையங்கள் உள்ளன. முதன் முதலாக இந்தியா முழுவதும் ஐ.பி.பி.பி.யின் 650 கிளைகள் தொடங்கப்படும்.ஒரு கிளைக்கு 5 அணுகு மையங்கள் என்ற வீதத்தில், 3 ஆயிரத்து 250 தபால் நிலையங்களில் அணுகு மையங்கள் அமைக்கப்படும். அந்த வகையில் தொடக்கத்தில் தமிழகத்தில் 37 கிளைகள், 185 அணுகு மையங்களில் இயங்கும். பின்னர் இவை படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து தபால் நிலையங்களும் ஐ.பி.பி.பி.யின் இணைப்பைப் பெற்றுவிடும்.

இந்தியாவில் எத்தனையோ தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் என இருக்கும்போது இந்த வங்கிகள் எந்த வகையில் தனிச் சிறப்பை பெறுகின்றன என்ற கேள்வி எல்லாருக்கும் எழுகிறது. இதுகுறித்து “தினத்தந்தி”க்கு அஞ்சல் துறை தலைவர் (சென்னை நகர மண்டலம்) ஆர்.ஆனந்த் அளித்த பேட்டி வருமாறு:-

அஞ்சல் துறையில் ஏற்கனவே சேமிப்புக் கணக்குகள் வசதி உள்ளன. அந்த வகையில் இந்தியா முழுவதும் 35 கோடி மக்களும், தமிழகத்தில் 2.14 கோடி மக்களும் தபால் நிலையங்களில் சேமிப்புக் கணக்குகளை வைத்துள்ளனர்.

ஆனால் தற்போது தொடங் கப்படவுள்ள ஐ.பி.பி.பி. வங்கி சேவை என்பது முற்றிலும் வித்தியாசமானது. இதைத் தொடங்குவதற்கு வைப்புத் தொகை, அறிமுக நபர் மற்றும் ஆவணங்கள் தேவைப்படுவதில்லை. ஆதார் அட்டை இருந்தால் மட்டும் போதுமானது.

இந்த சேவை தொடங்கியதும், இதற்கான செல்போன் செயலி (மொபைல் ஆப்) மற்றும் இணையதளங்கள் இயக்கம் பெறத் தொடங்கிவிடும். மொபைல் ஆப் மூலம் தொடர்பு கொண்டு, ஐ.பி. பி.பி.யில் கணக்கைத் தொடங்க வீட்டுக்கு அழைப்பு விடுக்க முடியும்.

ஏற்கனவே அறிமுகமாகியுள்ள தபால்காரர், அழைத்தவரின் முகவரிக்கு வந்து கணக்கைத் தொடங்க உதவி செய்வார். வங்கிக் கணக்கை தொடங்குவதற்கு சேவைக்கட்டணம் கிடையாது. குறைந்தபட்ச வைப்புத் தொகையும் கிடையாது.

ஆதார் அட்டையை காட்டினால், அதன் மூலம் தபால்காரர் கணக்கைத் தொடங்கி வைப்பார். பின்னர் பணம் போடவேண்டும் அல்லது எடுக்க வேண்டும் என்றால், முந்தைய நாளில் அதுதொடர்பான தகவலை இணையதளம் அல்லது ஆப் மூலம் தெரிவித்துவிட வேண்டும்.

அதைப் பார்த்து தபால்காரர், அந்த வாடிக்கையாளர் கேட்ட தொகையை கொண்டு வந்து தந்து விடுவார். இதற்காக குறிப்பிட்ட அளவு தொகையை தபால்காரர் தனது கையில் வைத்திருப்பார். சேமிப்புக் கணக்கு என்றால் ஒரு நாளைக்கு ரூ.4 ஆயிரமும், நடப்புக் கணக்கு என்றால் ரூ.20 ஆயிரமும் எடுத்துக்கொள்ள அல்லது செலுத்த முடியும்.

ஐ.பி.பி.பி. கணக்கில் ஒருவர் அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். இந்திய ரிசர்வ் வங்கியின் விதி, அந்த அளவு தொகைக்குத்தான் அனுமதி அளித்துள்ளது. குறைந்தபட்ச டெபாசிட் தொகை அளவு கிடையாது.

ஏற்கனவே தபால் நிலையத்தில் சேமிப்புக் கணக்கு இருந்து, ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் டெபாசிட் செலுத்தினால், மிகையான தொகை அவரது சேமிப்புக் கணக்கில் வரவாக வைக்கப்படும்.

ஐ.பி.பி.பி. சேமிப்புக்கு 4 சதவீத வட்டி உண்டு. இது மற்ற வங்கிகளைவிட அதிகம். வீட்டுக்கு வந்து தபால்காரர் பணப்பரிவர்த்தனை சேவை அளிப்பதற்காக ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும். தபால் நிலையங்களில் இந்த வங்கிக்கென்று தனி கவுண்ட்டர்கள் இருக்கும். அங்கு வந்து பணப்பரிவர்த்தனை செய்ய கட்டணம் கிடையாது.

ஸ்மார்ட் போன் வைத்துக்கொள்ளாதவர்களும், இந்த சேவையை போன் மூலம் தொடர்பு கொண்டு பெறமுடியும். ஐ.பி.பி.பி. வங்கியில் பணியாற்றுவதற்காக தற்போது இந்தியா முழுவதும் 2 ஆயிரம் பேரும், தமிழகத்தில் 37 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மற்ற வங்கிகளில் உள்ளது போன்ற நெப்ட், ஐ.என்.பி.எஸ்., ஆர்.டி.ஜி.எஸ். போன்ற பணப்பரிவர்த்தனை முறைகள், நெட் பேங்கிங், செல்போன் வங்கிச் சேவை ஆகிய வசதிகள் ஐ.பி.பி.பி.யிலும் உண்டு. குறுந்தகவல்கள் அல்லது “மிஸ்ட் கால்” கொடுத்தும் வங்கி சேவையைப் பெறலாம்.

ஐ.பி.பி.பி. வங்கியில் சேமிப்புக் கணக்கு மற்றும் நடப்புக் கணக்கைத் தொடங்கலாம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம், சமூக பாதுகாப்பு திட்ட உதவித்தொகை மற்றும் அரசு மானிய உதவித்தொகை பெறுதல், வெளிநாட்டில் இருந்து அனுப்பப்பட்ட பணத்தை பெறுதல், காப்பீட்டுத் தொகை, கடன் தொகையை செலுத்தும் வசதி, செல்போன், டி.டி.எச். ரீசார்ஜ், மின்சாரம், குடிநீர், எரிவாயு உள்ளிட்டவற்றுக்காக கட்டணம் செலுத்தும் வசதி, மின்னணு பணம் செலுத்தும் வசதி உள்பட பல சேவைகளை இந்த வங்கி வழங்குகிறது.

ஐ.பி.பி.பி. வங்கியின் வாடிக்கையாளர்கள் கியூ ஆர் என்ற மின்னணு பணமாற்றத்துக்கான அட்டையை பெற்றுக்கொள்ளலாம். வங்கியிடம் பதிவு பெற்றுள்ள மளிகைக்கடை உள்ளிட்ட கடைகளில் பொருட்களுக்காக ரொக்கப் பணம் செலுத்துவதற்குப் பதிலாக இந்த கியூ ஆர் அட்டை மூலம் பணம் செலுத்திவிடலாம்.

வங்கிக் கணக்கு எண் மற்றும் பாஸ்வேர்டை மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ளத் தேவையில்லை. வாடிக்கையாளர் தனது கைரேகையை சான்றுறுதியாக வைத்துக்கொள்ளலாம்.

வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் வசதி ஐ.பி.பி.பி. வங்கியிடம் இல்லை. அனைவருமே குறிப்பாக மூத்த குடிமக்கள், குடும்பத் தலைவிகள், சிறு வணிகர்கள், மாணவர்கள் இந்த சேவையை எளிதாக பெற்றுக்கொள்ள முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

செப்டம்பர் 1-ந் தேதி ஐ.பி.பி.பி. வங்கி தொடங்கப்பட்ட பின்னர் அதன் வாடிக்கையாளர்கள் “மிஸ்ட் கால்” மற்றும் எஸ்.எம்.எஸ். குறுஞ்செய்தி வங்கி சேவைகளுக்கான எண்களை பயன்படுத்தலாம். “மிஸ்ட் கால்” சேவை மூலம், வாடிக்கையாளர் பதிவுக்கு 8424054994, இருப்புத் தொகையை அறிய 8424046556, 8424026886 ஆகிய எண்களை பயன்படுத்தலாம்.

எஸ்.எம்.எஸ். குறுஞ்செய்தி சேவை மூலம், வாடிக்கையாளர் பதிவுக்கு 7738062873, இருப்புத் தொகை அறிவதற்கு 7738062873 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

ஐ.பி.பி.பி. வங்கி பற்றி மேலும் அறிய contact@ippbonline.in என்ற மின்னஞ்சல் மற்றும் www.ippbonline.com என்ற இணையதளத்தை அணுகலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment