மோடிக்கு பாகிஸ்தான் விவகாரங்களில் ஆழ்ந்த சிந்தனை இல்லை – ராகுல்

248 0

பிரதமர் நரேந்திர மோடியிடம் பாகிஸ்தான் விவகாரத்தில் ஆழ்ந்த சிந்தனை இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 2 நாள் பயணமாக இங்கிலாந்து சென்றார். அங்கு லண்டன் நகரில் சர்வதேச ஸ்ட்ரேடஜிக்  கல்வி நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.

அப்போது, இந்தியா, பாகிஸ்தான் இடையேயான விவகாரம் குறித்து அவர் பேசியபோது பிரதமர் நரேந்திர மோடியை சாடினார். ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளதாவது :-

பாகிஸ்தான் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஆழ்ந்த சிந்தனை இல்லை. பாகிஸ்தான் விவகாரத்தை கையாள்வது என்பது மிகக் கடினமானது. பாகிஸ்தானைப் பொறுத்தமட்டில் மேலாதிக்க அதிகாரம் எந்த ஒரு அமைப்பிடமும் இல்லை.

டோக்லாமில் சீனா அத்துமீறி நுழைந்ததை, பிரதமர் நரேந்திர மோடி தனி சம்பவமாக பார்க்கிறார். இது பல்வேறு நிகழ்வுகளில் ஒரு அங்கம். சீனாவின் பல அத்துமீறல்களின் தொடர்ச்சியாக பிரதமர் மோடி ஆழ்ந்து கவனித்து வந்து இருந்தால் அவர்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்திருக்காமல் தடுத்து நிறுத்தி இருக்க முடியும். உண்மையை சொல்வதானால், டோக்லாமில், சீனர்கள் இன்றும் உள்ளனர்.

இந்திய வெளியுறவுத்துறை மந்திரியின் முழு அதிகாரத்தையும் மோடி தன் பக்கம் இழுத்து வைத்துள்ளார். வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு வேலையில்லாமல் செய்துவிட்டார். அவருக்கு இப்போது இருக்கும் வேலை விசா வழங்குவது மட்டும்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment