சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் தேசிய நலன் சார்ந்த வழக்குகளின் விசாரணையை நேரலையில் ஒளிபரப்பக்கோரும் வழக்கில் தீர்ப்பை கோர்ட் நிறுத்தி வைத்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் தேசிய நலன் சார்ந்த வழக்குகளின் விசாரணையை நேரலையில் ஒளிபரப்பவோ அல்லது வீடியோ பதிவு செய்யவோ அனுமதிக்க கேட்டு சட்டக்கல்லூரி மாணவர் ஸ்வப்னில் திரிபாதி மற்றும் மூத்த வக்கீல் இந்திரா ஜெய்சிங் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் பதிலளித்த மத்திய அரசு, தலைமை நீதிபதி அமர்வில் நடக்கும் அரசியல்சாசன வழக்குகளின் விசாரணையை சோதனை அடிப்படையில் நேரலையில் ஒளிபரப்பலாம் என கூறியது.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இதன் தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக நீதிபதிகள் நேற்று அறிவித்தனர். தலைமை நீதிபதி அமர்வில் நடைபெறும் முக்கிய வழக்குகளின் விசாரணையை நேரலையில் ஒளிபரப்புவது குறித்து அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலின் கருத்தினை கேட்டபின் இது குறித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.