இந்தியாவில் முதல்முறையாக பிறந்த பென்குயின் சில நாட்களிலேயே உயிரிழந்த சோகம்

265 0

சுதந்திர தினத்தன்று முதல்முறையாக இந்தியாவில் பிறந்த பென்குயின் சில நாட்களிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் வேறு எங்கும் பென்குயின்கள் இல்லாத நிலையில் மும்பையில் உள்ள பைகுலா விலங்கியல் பூங்காவிற்கு கடந்த 2016-ம் ஆண்டு தென்கொரியாவில் இருந்து ஹாம்போல்டு வகையைச் சேர்ந்த 8 பென்குயின்கள் கொண்டு வரப்பட்டன. அதில் ஒரு பென்குயின் பூங்காவிற்கு வந்த 3 மாதங்களில் இறந்து விட்டது.

இதனால், விலங்குகள் நல அமைப்பு பென்குயின் வாழ ஏதுவான சூழல் இல்லாத இந்தியாவில் அவற்றை பராமரிக்க கூடாது என மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுக்கவில்லை.

எனவே, மீதமுள்ள 7 பென்குயின்களை, பனிப்பிரதேசங்களில் இருப்பது போல் 16 -18 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் சுமார் 1,700 சதுர அடியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட இடத்தில் முறையாக பராமரிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், இதில் ஒரு பென்குயின் கடந்த 8-ம் தேதி முட்டைப்பொறித்தது, அந்த முட்டையில் இருந்து சுதந்திர தினத்தன்று ஒரு குஞ்சு பொறித்து வெளியே வந்தது. இந்தியாவில் பிறந்த முதல் பென்குயின் என்பதால் பூங்கா அதிகாரிகள் அதனை மிகவும் கவனமாக கவனித்து வந்தனர். ஆனால், அந்தப் பென்குயின் நேற்று உயிரிழந்ததாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment