எழுக தமிழ்: தமிழ் மக்கள் தற்காப்பு அரசியலை விட்டு வெளிவர வேண்டும்

378 0

000தமிழ் மக்களின் அரசியல் ஒருவித தற்காப்புப் பொறிக்குள் சிக்குண்டிருக்கிறது. இப்பொழுது கொழும்பு அல்லது வெளித்தரப்புக்கள் ஏதாவது ஒரு நகர்வை மேற்கொண்டால் அதற்கு பதில்வினையாற்றும் ஒரு தரப்பாகவே தமிழ்த்தரப்பு காணப்படுகிறது. ஆனால் ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் நிலைமை வேறாகவிருந்தது. தமிழ்த்தரப்பு மேற்கொள்ளும் ஒரு தாக்குதலுக்கு எதிர்த்தரப்பும் வெளித்தரப்புக்களும் பதில்வினையாற்றும் நிலைமை அப்பொழுது காணப்பட்டது.

இவ்வாறு தமிழ்த் தரப்பானது பதில்வினையாற்றும் ஒரு தரப்பாக மட்டும் சுருங்கிக் காணப்படுவது என்பது கடந்த ஏழாண்டுகளாக மட்டும்த்தான் நிலவிவரும் ஒரு தோற்றப்பாடு அல்ல. 2009 மே மாதத்திற்கு முன்னரே அது தொடங்கிவிட்டது. 4ம்கட்ட ஈழப்போர் எனப்படுவது ஏறக்குறைய ஒரு தற்காப்புப் போராகவே காணப்பட்டது. மாவிலாறில் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரையிலும் எதிர்த்தரப்பு மேற்கொண்ட நகர்வுகளுக்கு பதில்வினையாற்றும் ஒரு போக்கே மேலோங்கிக் காணப்பட்டது. முடிவில் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது. எனவே தமிழ் அரசியலானது கடந்த ஏழாண்டுகளாகத்தான் தற்காப்பு நிலை அரசியலாக காணப்படுகிறது என்பதல்ல. ஏறக்குறைய ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக அது அவ்வாறாகத்தான் காணப்படுகிறது.

இத் தற்காப்பு அரசியலை இலங்கைத் தீவிற்குள் மட்டும் வைத்து விளங்கிக்கொள்ள முடியாது. அதை அதற்குரிய பிராந்திய மற்றும் பூகோள வியூகங்களுக்குள் வைத்தே விளங்கிக் கொள்ள வேண்டும்.

2002ல் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்த பொழுது சர்வதேச பாதுகாப்பு வலைப் பின்னல் ஒன்றைப் பற்றி பிரஸ்தாபித்தார். அது ஒரு பூகோள வியூகம். அமெரிக்காவின் தலைமையிலான மேற்கு நாடுகளின் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு பூகோள வியூகம் அது. ஆசியப் பிராந்தியத்தில் சீனா ஒரு துருவமாக எழுச்சி பெற்று வரும் ஒரு பிராந்தியப் பின்னணிக்குள் அதை எதிர் கொள்வதற்காக அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் இந்தியாவும் வகுத்துக்கொண்ட ஒரு வியூகம் அது.

ஆனால் புலிகள் இயக்கம் ரணிலை 2005ல் தோற்கடித்த பொழுது மேற்படி பிராந்திய மற்றும் பூகோள வியூகம் இலங்கைத் தீவில் பெருமளவிற்கு குழப்பப்பட்டது. நோர்வே அனுசரனை செய்த சமாதானமானது அதன் ஆழமான பொருளில் அமெரிக்கா முன்னெடுத்த சமாதானம் தான். புலிகள் இயக்கம் அதை ஒரு தருமர் பொறி என்று அஞ்சியது. அது தம்மை நீர்த்துப் போகச் செய்துவிடும் என்று அவர்கள் அஞ்சினார்கள். அதனாலேயேஅவர்கள் சமாதானத்தை முறித்தார்கள். ஒன்றில் சமாதானத்துள் கரைந்து போவது அல்லது அதை எதிர்ப்பது என்ற இரண்டு பெரிய தெரிவுகளுக்கிடையில் புலிகள் இயக்கமானது சமாதானத்தை முறிப்பது என்ற முடிவை எடுத்தது. அப்போது இருந்த பூகோளமற்றும் பிராந்திய யதார்த்தத்தின்படி ஒன்றில் வளைவது அல்லது முறிவது என்ற இரண்டு தெரிவுகளில் முறிவது என்ற முடிவை அந்த இயக்கம் எடுத்தது..

இவ்வாறான ஓர் அனைத்துலக மற்றும் பிராந்திய பின்னணிக்குள்தான் ஈழத்தமிழர்களுடைய அரசியலும் அதிகபட்சம் தற்காப்பு நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. இத் தற்காப்பு நிலைக்குள் இருந்து வெளிவந்து தமது அசைவுகள் மூலம் கொழும்பையும், வெளித்தரப்பையும் தம்மை நோக்கி வரச் செய்வது என்று சொன்னால் ஈழத்தமிழர்கள் மேற்சொன்ன பிராந்திய மற்றும் அனைத்துலக யதார்த்தங்களை கற்றறிய வேண்டும். புலிகள் இயக்கத்தை நந்திக் கடலை நோக்கிச் செலுத்திச் சென்ற அதே பிராந்திய மற்றும் அனைத்துலக சூழல் தான் அதன் புதிய வளர்ச்சிகளோடு இப்பொழுதும் நிலவுகின்றது. எனவே ஆயுதப் போராட்டத்தின் தோல்விகளிலிருந்தும் அதற்குப் பின்னராக ஏழாண்டு கால தேக்கத்திலிருந்தும் தமிழ் மக்கள் கற்றுக் கொள்ளவில்லை என்றால் இந்த தற்காப்பு அரசியலிலிருந்து வெளிவர முடியாது.

பாரம்பரிய மிதவாத அணுகு முறைகளுக்கு ஊடாகவோ அல்லது நாடாளுமன்ற அரசியலுக்கு ஊடாகவோ மட்டும் இத் தற்காப்பு பொறியை உடைத்துக் கொண்டு வர முடியாது. தமிழ் மக்கள் எதையாவது புதிதாக செய்ய வேண்டியிருக்கிறது. அது நவீனமானதாகவும் படைப்புத் திறன் மிக்கதாகவும் இருக்க வேண்டியுள்ளது. அதற்கு தமிழ் மக்கள் புதிதாக சிந்திக்க வேண்டியுள்ளது. அதாவது ஒரு புதிய கருத்து வெடிப்பு நிகழ வேண்டியுள்ளது. முற்றிலும் புதிய ஒரு சிந்தனை மறுமலர்ச்சி தேவைப்படுகிறது. அதற்கு வேண்டிய ஆராய்ச்சி மையங்களையும், சிந்தனைக் குழாம்களையும் உருவாக்க வேண்டியுள்ளது.

இவ்வாறான தேவைகளின் மத்தியில் தான் வரும் 24ம் திகதி யாழ்ப்பாணத்தில் ‘எழுக தமிழ்’ எனப்படும் ஒரு பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மேற்சொன்ன விளக்கத்தின் பின்னணியில் வைத்துப் பார்த்தால் இவ்வாறான மக்கள் மயச் செயற்பாடுகள் முக்கியமானவை, அவசியமானவை.

ஒரு வெகுசன மையச் செயற்பாடு எனப்படுவது பிரதானமாக இரண்டு விளைவுகளை ஏற்படுத்த வேண்டும். முதலாவது போராடும் மக்களின் போராட்ட நெருப்பை அணைய விடாமற் பேணி மேலும் மிளாசி எரியச் செய்ய வேண்டும். இரண்டாவது எதிர்த்தரப்பையும், வெளித்தரப்புக்களையும் அது திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும். அவர்களின் நிலையான நலன்களில் அது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ‘எழுக தமிழ்’ இவ்வாறான விளைவுகளை ஏற்படுத்துமா?

ஏற்கெனவே ஆட்சி மாற்றத்தை உடனடுத்து யாழ் பல்கலைக்கழகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு பேரணி இடம்பெற்றது. புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்குப் பின் தமிழ்ப்பகுதிகளில்; இடம்பெற்ற ஒப்பீட்டளவில் மிகப் பெரிய பேரணி அதுவாகும். அதன்பின் இப்பொழுது மற்றொரு பேரணிக்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இப் பேரணி ஒழுங்கு செய்யப்படும் காலகட்டம் மிகவும் கவனிப்பிற்குரியது. திலீபன் உண்ணாவிரதம் இருந்த ஒரு காலச்சூழல் இது. அதே சமயம் நல்லூரில் கம்பன் விழா இடம்பெற்றுள்ளது. இவ்விழா 15, 16, 17ம் திகதிகளில் நடைபெற்றது. ஏறக்குறைய இதே நாட்களில் மட்டக்களப்பில் முத்தமிழ் விழா நடைபெற்றுள்ளது.யாழ் நகர சபை மைதானத்தில் ஆவிக்குரிய சபையினரின் சுவிஷேசப் பெருவிழா இடம்பெற்றுள்ளது. பாவக்கட்டுக்களிலிருந்தும், சாபக்கட்டுக்களிலிருந்தும், பிசாசுக்கட்டுக்களிலிருந்தும், தீராத கொடிய நோயிலிருந்தும் விடுதலை பெறுவதற்கான வழிபாட்டு நிகழ்வு இது என்று அறிவிக்கப்படட இவ்விழாவிற்கு ‘முன்னோக்கிச் செல்லல்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம் பின்வரும் பைபிள் வாசகத்தோடு தொடங்குகிறது. ‘நீதிமான் தன் வழியை உறுதியாகப் பிடிப்பான். சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும் பலமடைவான்’. இவ்வாறான விழாக்களின் பின்னணியில் வரும் சனிக்கிழமை ‘எழுக தமிழ்’ இடம்பெறப் போகிறது.

எழுக தமிழின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் இக் கட்டுரை ஏற்றுக் கொள்கிறது. அதே சமயம் இவ்வாறான பேரணிகள் தொடர்பில் உலகளாவிய, பிராந்திய மற்றும் உள்ளூர் யதார்த்தம் ஒன்றையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். கெடுபிடிப் போரின் வீழ்ச்சிக்குப் பின் குறிப்பாக தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்குப் பின் உலகு பூராகவும் இது போன்று பல பேரணிகள் நடத்தப்பட்டிருக்கின்றன. கெடுபிடிப் போரின் முடிவை உடனடுத்து சீனாவில் தியனென்மென் சதுக்கத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களலிருந்து தொடங்கி அண்மை மாதங்களாக காஷ்மீரில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டப் பேரணிகள் வரையிலுமான உலகு தழுவிய அனுபவத்திலிலுருந்து தமிழ் மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக அமெரிக்க அதிபரான முதலாவது புஷ் வளைகுடா யுத்தத்தை தொடங்கிய போது அதற்கு எதிராக பரவலாக உலகம் முழுவதும் பேரணிகள் நடத்தப்பட்டன. ஆனால் அமெரிக்க அரசு அதற்கு அசைந்து கொடுக்கவில்லை. அமெரிக்காவின் பங்குச் சந்தை மையமாகிய வோல்ற்ஸ்ரீட்டை முற்றுகையிட்டு தொடர்ச்சியாக எதிர்ப்புக் காட்டப்பட்டது. ஆனால் அந்தப் போராட்டம் ஒரு கட்டத்தில் தானாகவே சோர்ந்து போய் விட்டது. அரபு நாடுகளில் மேலெழுந்த அரபு வசந்தம் என்றழைக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களை இங்கு குறிப்பிடலாம். இவை யாவும் அங்கெல்லாம் ஆட்சி செய்த சர்வாதிகாரிகளுக்கு எதிராக சாதாரண மக்கள் கிளர்ந்தெழுந்த புரட்சிகர நிகழ்வுகள் என்று குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக சமூக வலைத் தளங்களின் பெருக்கம் காரணமாக சாதாரண மக்கள் புதிய பலத்தைப் பெற்றதும் இதற்கு ஒரு காரணம் என்றும் கூறப்பட்டது.

ஆனால் இவை யாவும் மிகைபடுத்தப்பட்ட சித்திரங்களே. அரபு வசந்தம் எனப்படுவது குறிப்பிட்ட நாடுகளில் அதிகரித்து வந்த அதிருப்தியையும், கொதிப்பையும் மேற்கு நாடுகள் கெட்டித்தனமாக கையாண்டதன் விளைவுதான். மேற்கத்தைய புலனாய்வு நிறுவனங்களும் மேற்கத்தைய முகவர் நிறுவனங்களும் பின்னிருந்து ஊக்குவித்து ஏற்படுத்திய கிளர்ச்சிகளே அவை என்ற விமர்சனம் பரவலாக உண்டு. குறிப்பாக சமூக வலைத்தளங்கள் தொடர்பில் காட்டப்பட்ட சித்திரம் மிகைப்படுத்தப்பட்டது என்ற ஒரு விமர்சனம் உண்டு. அரபு வசந்தம் நிகழ்ந்த நாடுகளில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்பான புள்ளிவிபரங்களை ஆராய்ந்த பலரும் அது தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். அதாவது அரபு வசந்தம் எனப்படுவது ஒரு விதத்தில் நேட்டோ விரிவாக்கம் தான். ‘பச்சை ஆபத்துக்கு’ எதிரான மேற்கின் வியூகத்தின் மிகக் கவர்ச்சியான ஒரு பகுதி அது.

ஈழத்தமிழர்களும் புலம்பெயர்ந்த நாடுகளில் ஆர்ப்பாட்டங்களைச் செய்துள்ளார்கள். நாலாம்கட்ட ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் அமெரிக்க ஐரோப்பியக் கண்டங்களைச் சேர்ந்த தலைநகரங்களில் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் அளவிற்கு பேரணிகள் இடம்பெற்றிருக்கின்றன. கனடாவில் அதன் பிரதான சாலையானது அதன் வரலாற்றிலேயே முதற் தடவையாக குறிப்பிடத்தக்க நேரம் தடைபட்டிருந்தது. ஆனால் மேற்சொன்ன போராட்டங்கள் எவையும் மேற்கத்தேய அரசுகளின் கொள்கைத் தீர்மானங்களில் மாற்றங்களை ஏற்படுத்தினவா?

தமிழ் நாட்டிலும் ஈழத்திமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் கொதித்தெழுந்தார்கள். ஒரு ஜெனிவாக் கூட்டத் தொடரின் பொழுது மாணவர்களின் எழுச்சி அதன் மகத்தான உச்சமொன்றைத் தொட்டது. ஆனால் அந்தப் போராட்டம் ஒரு கட்டத்திற்கு மேல் தொடரவில்லை. அண்மை மாதங்களாகக் காஷ்மீரில் மக்கள் ஆர்ப்பரித்து வருகிறார்கள். போஸ்ரர் பையன் எனப்படும் ஓர் இளம் போராளியின் மரணத்தைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆவேசத்தோடு தெருக்களில் இறங்கினார்கள். ஆனால் அந்தப் போராட்டங்கள் காஷ்மீர் தொடர்பான இந்திய நடுவன் அரசின் அணுகு முறைகளில் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றன?

எனவே கெடுபிடிப் போரின் முடிவிற்குப் பின் உலகம் முழுவதிலும் நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் ‘இன்ரிபாடாக்கள்’குறித்து தொகுக்கப்பட்ட ஒரு ஆய்வு அவசியம். இவற்றுள் பெரும்பாலான போராட்டங்கள், அதிகாரங்களை எதிர்பார்த்த அளவிற்கு அசைக்க முடியவில்லை. குறிப்பாக தொடர்ச்சியாக பல நாட்கள் நிகழ்ந்த சில போராட்டங்கள் கூட அதிகாரத்தை உலுப்பியதாகத் தெரியவில்லை. உலகளாவிய இந்த அனுபவத்திலிருந்து ஈழத்தமிழர்களும் கற்றுக் கொள்ள வேண்டும். தகவல் தொழில் நுட்பப் பெருக்கத்தின் பின் வெகுசன மைய போராட்டங்கள் மற்றும் செயற்பாட்டு இயக்கங்கள் தொடர்பில் ஒரு புதிய சிந்தனை தேவைப்படுகின்றது. குறிப்பாக ஒரு நாள் ஊர்வலம் மட்டும் போதாது. அல்லது சில நாள் விழாக்கள் மட்டும் போதாது. இவற்றுக்குமப்பால் தொடர் முன்னெடுப்புக்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். எதைச் செய்தால் கொழும்பும், வெளித்தரப்புக்களும் திரும்பிப் பார்க்குமோ அதைச் செய்ய வேண்டும்.

ஆசிய மையங்களை நோக்கி நகரும் ஓர் உலகச் சூழலில் இலங்கைத் தீவிற்கு உள்ள கேந்திர முக்கியத்துவத்தை தீர்மானிக்கும் ஒரு தரப்பாக தமிழ் மக்கள் காணப்படுகிறார்கள். தமிழ் மக்களின் கேந்திர முக்கியத்துவத்தினை கருத்திலெடுத்தே புலிகள் இயக்கத்தை முறியடிப்பது என்று சக்தி மிக்க நாடுகள் முடிவெடுத்தன. தமது வியூகத்தை குழப்பும் எந்தவொரு அரசியல் நகர்வையும் -அது படை நடைவடிக்கையாக இருந்தாலும் சரி அல்லது ராஜிய நகர்வாக இருந்தாலும் சரி- அதைத் தடுக்கவே சக்தி மிக்க நாடுகள் முயற்சிக்கும். எனவே தமிழ் மக்கள் தமது கேந்திர முக்கியத்துவத்தை நன்குணர்ந்து காய்களை நகர்த்த வேண்டியிருக்கிறது. கேந்திர முக்கியத்துவம் மிக்க தமது வாக்குகளை பொன் போல பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் மற்றவர்களுடைய நிகழ்ச்சி நிரல்களின் கருவிகளாக பயன்படுத்தப்படுவதற்குப் பதிலாக மற்றவர்களை தமிழ்மக்கள் பயன்படுத்தும் ஓரு வளர்ச்சிக்கு போக வேண்டும்.

ஒரு ‘எழுக தமிழ்’ மட்டும் போதாது. அது அடுத்த நாள் தலைப்புச் செய்தியாக வருவதோடு முடிந்து போகின்ற ஒரு விடயமாக இருக்க கூடாது. அது ஒரு தொடர் முன்னெடுப்பாக இருக்க வேண்டும். கம்பன் கழகத்தின் கூட்டங்களுக்கு ஒரு தொகை பார்வையாளர்கள் தொடர்ந்து வருவார்கள். ஆவி எழுப்புதல் கூட்டங்களுக்கும் விசுவாசிகள் பெருகி வருவார்கள். அடுத்த மாதம் 9ம் திகதி யாழ் நகரில் நடக்கவிருக்கும் ‘நண்பேண்டா’ என்ற தலைப்பிலான இசை நிகழ்ச்சிக்கும் சனங்கள் பெருந் தொகையில் வருவார்கள். சாதாரண சனங்கள் பார்வையாளர்களாக,ரசிகர்களாக, விசுவாசிகளாக, பக்தர்களாக, அபிமானிகளாக கூட்டங்களுக்கு வருவது என்பது வேறு. தமக்குள்ள கேந்திர முக்கியத்துவத்தை உணர்ந்து அரசியல் கூட்டங்களுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும் அது போன்ற தொடர் முன்னெடுப்புக்களுக்கும் விழிப்படைந்த பங்காளிகளாக வருவது என்பது வேறு. தமிழ் அரசியல் இப்பொழுது சிக்குண்டிருக்கும் தற்காப்புப் பொறிக்குள் இருந்து வெளி வருவதென்றால் எழுக தமிழைப் போல மேலும் புதிதாக படைப்புத் திறனோடு சிந்திக்கப்பட வேண்டும்.

கடந்த ஏழாண்டுகளாக தமிழ் மக்கள் மேற்கொண்ட பெரும்பாலான போராட்டங்கள் கொழும்பையோ, வெளித்தரப்புக்களையோ பெரியளவில் அசைத்திருப்பதாக தெரியவில்லை. குறிப்பாக கடந்த ஆண்டு ஜனவரி 8ம் திகதியிலிருந்து இன்று வரையிலுமான 21 மாத காலப்பகுதிக்குள் தமிழ் மக்கள் கேந்திர முக்கியத்துவம் மிக்க தமது வாக்குகளை இரண்டு தடவை பிரயோகித்திருக்கிறார்கள். பல தடவைகள் சிறிய அளவிலும், பெரிய அளவிலும் வெவ்வேறு வழிமுறைகளுக்கூடாக தமது எதிர்ப்பை காட்டியிருக்கிறார்கள். தமிழ்த் தலைவர்கள் சிலர் நாடாளுமன்றத்திலும், மாகாண சபையிலும் இவற்றுக்கு வெளியிலும் தாங்கள் சந்திக்கும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் முன்னிலையிலும் விட்டுக் கொடுப்பின்றி தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் தொடர்ச்சியாகஏதோ ஒரு போராட்டம் நடந்து கொண்டேயிருக்கிறது. தமிழ் நாட்டிலும் ஏதோ ஒரு விதத்தில் எதிர்ப்பு காட்டப்பட்டு வருகிறது. இவ்வாறான கடந்த ஏழாண்டு கால அனுபவங்களை தொகுத்தும் பகுத்தும் ஆழமாக ஆராய்வதன் மூலம் பெறப்போகும் படிப்பினைகளின் அடிப்படையில் தமிழ் மக்கள் முற்றிலும் புதிய, படைப்புத் திறன் மிக்க, மக்கள் மைய மற்றும் செயற்பாட்டு மைய அரசியல் வெளி ஒன்றை திறக்க வேண்டியிருக்கிறது. அதற்கு தாயகம்- டயஸ்பொறா -தமிழகம் ஆகிய மூன்று தரப்புக்களையும் இணைத்துச் சிந்திக்க வேண்டும். எல்லாவற்றையும் புதிதாகச் சிந்திக்க வேண்டும். ஒரு பெரும் சிந்தனை மறுமலர்ச்சி இல்லையேல் ஈழத்தமிழர்களுக்கு அடுத்த கட்ட அரசியலே இல்லை.’நீதிமான் தன் வழியை உறுதியாகப் பிடிப்பான். சுத்தமான கைகளுள்ளவன் மேலும் மேலும் பலமடைவான்’.

நிலாந்தன்