மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த இளம் விஞ்ஞானிகள் தங்களின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் பதிப்புரிமைக்காக இனி டெல்லி சென்று பதிவு செய்ய வேண்டிய தேவையில்லை. சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்திலேயே பதிவு செய்யும் வகையில் மத்திய அரசு வெவ்வேறு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வந்த இத்துறைகளை ஒரே அமைச்சகத்தின் கீழ் ஒருங்கிணைத்துள்ளது.
அறிவுசார் சொத்துரிமை சட்டத் தின் கீழ் வரும் வணிக நோக்கிலான புதிய கண்டுபிடிப்புகள், வணிகக் குறியீடுகள், வணிக அடையாளப் பதிவுகள், புவிசார் குறியீடுகள், வடிவமைப்பு பதிவுகள் இந்தியா வில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் ஆமதாபாத் ஆகிய இடங்களில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அலுவலகங்களில் பதிவு செய்யப் படுகின்றன. இந்த அறிவுசார் சொத்துரிமை அலுவலகங்கள் மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்ச கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.
ஆனால், நாடு முழுவதும் உள்ள பொறியியல் பட்டதாரி மாணவர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த இளம் விஞ்ஞானிகள் தங்களின் மின்னணுவியல், மின்சாரவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளை ‘குறை கடத்திகளின் ஒருங்கி ணைந்த சுற்றுகளின் திட்ட வடி வமைப்பு சட்டம்-2000’ ன் கீழ் (Semi conductors Integrated Circuit Layout designs Act 2000) டெல்லியில் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள மின்னணுவியல் துறையில் மட் டுமே பதிவு செய்ய முடியும்.
இதேபோல இளம் விஞ்ஞானி களின் ஆய்வுக் கட்டுரைகள், பொறி யாளர்கள், இசையமைப்பாளர்கள், தொழில் வர்த்தக நிபுணர்கள், பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்களின் புதிய படைப்புகளை பதிப்புரிமை சட்டம் 1957-ன் கீழ் பதிவு செய்ய மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் டெல்லியில் இயங்கி வரும் பதிப்புரிமை (Copy rights) அலுவலகத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்கிற நிலைமை இருந்து வருகிறது.
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வெவ்வேறு அமைச்சகங்களின் கீழ் இயங்கி வரும் குறை கடத்தி களின் ஒருங்கிணைந்த சுற்றுகளின் திட்ட வடிவமைப்பு பதிவு மற்றும் காப்புரிமை பதிவுகளை, மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் அறிவுசார் சொத்துரிமை அலுவலகங்களுடன் ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைக்க மத்திய அமைச்சரவை கடந்த மார்ச் மாதமே ஒப்புதல் அளித்தும், இணைக்கப்படாமல் இருந்து வந்தன.
இந்நிலையில் குறை கடத்தி மற்றும் பதிப்புரிமை துறைகளை அறிவுசார் சொத்துரிமை அலுவல கத்துடன் இணைக்கும் பணி இம்மாத இறுதிக்குள் முழுமை அடையும் என மத்திய மின்னணு வியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை இயக்குநர் ஏ.கே.கார்க், தமிழக அறிவுசார் சொத் துரிமை வழக்கறிஞர் சங்கத்துக்கு அனுப்பியுள்ள பதில் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
டெல்லி செல்லாமல் பதியலாம்
இது தொடர்பாக சென்னை அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்கத்தின் தலைவரான ப.சஞ்சய் காந்தி கூறும்போது, ‘‘அறிவுசார் சொத்துரிமை சட்டத் தின் கீழ் வரும் பதிப்புரிமை மற்றும் குறை கடத்திகளின் ஒருங்கி ணைந்த சுற்றுகளின் திட்ட வடிவமைப்பு போன்றவை உலகம் முழுவதும் ஒரே குடையின் கீழ்தான் இயங்கி வருகின்றன.
ஆனால் இந்தியாவில் மட்டும்தான் வெவ்வேறு அமைச்சகங்களின் கீழ் இயங்கி வந்தன. இதனால் புதிய கண்டுபிடிப்புகளை இளம் பொறியியல் மாணவர்களும், விஞ்ஞானிகளும் டெல்லி சென்றுதான் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
புதிய கட்டுப்பாட்டாளர் நியமனம்
நாடு முழுவதும் இளம் கண்டு பிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அலுவலகங்களுடன் இந்த துறைகளை இணைக்க மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்டது.
தற்போது இந்த அலுவலகங்கள் முறைப்படி இம்மாத இறுதிக்குள் இணைக்கப்படும் என மத்திய அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக ஓ.பி.குப்தா என்பவர் புதிய கட்டுப்பாட்டாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எனவே பதிப்புரிமை மற்றும் மின்னணுவியல் துறை சம்பந்தப் பட்ட கண்டுபிடிப்புகளுக்காக இனி தமிழக இளம் விஞ்ஞானிகளும், பொறியியல் மாணவர்களும் டெல்லி சென்று அவதியடைய தேவையில்லை. தங்களின் புதிய கண்டுபிடிப்புகளைச் சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்திலேயே பதிவு செய்து கொள்ளலாம்’’ என்றார்.