இலங்கையில் தமிழர்கள் ஜனநாயக ரீதியாக சமவுரிமையுடன் வாழ வேண்டியவர்கள் அவர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
முதலமைச்சர் அலுவலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போது , வடக்கில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட கூடாது எனும் கருத்தை பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கூறியமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இராணுவத்தின் தலைவராக இருந்தவர் அவர் இராணுவ ரீதியாக சிந்திப்பவர். அதனால் அவர் அவ்வாறு பேசி இருக்கலாம்.
ஆனால் நாங்கள் இராணுவத்திற்கு கீழ் அடிமைப்பட்டு இருக்க வேண்டும் என எழுதி வைக்கப்படவில்லை. யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் ஆகின்றன. இன்னமும் தமிழர்கள் இராணுவ கட்டுப்பட்டுக்குகுள் இருக்க வேண்டும் என நினைக்க முடியாது.
எங்கள் மக்களின் நிலையில் இருந்து சுதந்திரமாக அவர் கூறுவதனை ஏற்க முடியாது. இராணுவம் இங்கு இருந்து வெளியேற்றப்பட வேண்டும்.
இராணுவம் மக்களுக்கு நன்மைகள் செய்கின்றார்கள். அதனூடாக அவர்கள் மக்களை தம் வசப்படுத்த முனைகிறார்கள். எங்களின் உரித்துக்களை எம்மிடம் தந்து விட்டு அவ்வாறான உதவிகளை செய்தாலாவது நாம் அவர்களுடன் பேச முடியும் . உரிமைகள் உரித்துகளை பறித்துக்கொண்டு எம்மிடம் நல்லிணக்கத்தை பேசுகின்றார்கள்.
அது எங்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் நோக்கம் உள்ளது. நாங்கள் இந்த நாட்டில் ஜனநாயக முறைப்படி சம உரிமை பெற்றவர்கள் எனவே இவ்வறான இராணுவ ஆக்கிரமிப்புகளை ஏற்க முடியாது என தெரிவித்தார்.