வடக்கில் பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைப்பதற்காக இராணுவ முகாம்களை மூடி, முகாம்களின் அளவைச் சுருக்கும் இராணுவ தளபதியின் முடிவு முட்டாள்தனமானது என்று அமைச்சரும் முன்னாள் இராணுவ தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது,
நாங்கள் விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம். அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான பின்னணியையும் அந்தப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்குமான சூழலை உருவாக்கியிருக்கிறோம். அது போதுமானதல்ல.
அதிகாரப் பகிர்வை செய்ய வேண்டுமானால் நாம் பொது வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும். பெரும்பான்மையான மக்கள் அதனை எதிர்க்கிறார்கள்.
தமிழ் மக்கள் பொருளாதார அபிவிருத்தியில் ஆர்வம் கொண்டிருக்கிறார்களே தவிர அரசியலில் அல்ல. மக்கள் எதனைக் கேட்கிறார்கள் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டுமே தவிர, அரசியல்வாதிகளின் தேவைகளை அல்ல. சில தமிழ் அரசியல்வாதிகள் வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்கிறார்கள். எந்த அடிப்படையிலும் அவர்களின் அந்த அழுத்தங்களுக்கு விட்டுக்கொடுக்க முடியாது. நாட்டிலிருந்து இராணுவத்தை உங்களால் அகற்ற முடியாது.
நாட்டின் எல்லா இடங்களிலும் இராணுவத்தினரின் பிரசன்னம் இருக்க வேண்டிய தேவையுள்ளது. இராணுவம் தெற்கில் தான் இருக்க வேண்டும். வடக் கில் இருக்கக் கூடாது என்று உங்களால் கூறமுடியாது. இராணுவத்தின் பருமனைக் குறைக்க வேண்டிய தேவை இல்லை என்பதே எனது கருத்து.
எனது தனிப்பட்ட கருத்தின்படி, இராணுவத்தின் குறைந்தபட்ச பலம் 1,50,000 இற்கு மேல் இருக்க வேண்டும். உள்நாட்டுப் பிரச்சினைக்காக மாத்திரமல்ல. வெளிநாட்டு அச்சுறுத்தல் உள்ளிட்ட எந்தவொரு நிலைமையையும் எதிர்கொள்வதற்கும் நாட்டின் இராணுவம் தயாராக இருக்க வேண்டும்.
சிங்கப்பூர் ஒரு சிறிய நாடு. அவர்கள் 3 மில்லியன் பேரைக் கொண்ட இராணுவப் படையை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு குடிமகனுக்கும் போரிடுவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. எனினும் அவர்கள் அணிதிரட்டப்படவில்லை.
வடக்கில் சில பகுதிகளிலிருந்து இராணுவத்தினரை முழுமையாக வெளியேற்றக் கூடாது.
பொதுமக்களின் காணிகளை திரும்ப அவர்களிடம் ஒப்படைப்பதற்காக சில இராணுவ முகாம்களை மூடி, இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் அளவைக் குறைப்பது பற்றி இராணுவ தளபதி பெருமையாகப் பேசியதைக் கேள்விப்பட்டேன். இது முட்டாள்தனமானது.
ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மக்களுக்கு மீள வழங்குவதற்காக முகாம்களை மூடுவதையிட்டு பெருமைப்பட முடியாது. நாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். மக்களின் கருத்தைக் கேட்க வேண்டும். சரியான மதிப்பீட்டை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.