சிறைச்சாலைகளில் இருந்து போதைப்பொருள் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னர் சிறைச்சாலை அதிகாரிகள் சிலரிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் சீர்திருத்த அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.
எனினும் இவ்வாறான கொலைமிரட்டல்களையும் மீறி சிறைச்சாலைகளை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறைக்குள் உள்ள சிலர் வெளியில் உள்ள நபர்களை வைத்து மேற்கொள்ளும் போதைப்பொருள் வர்த்தகம் காரணமாக நாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தடுப்பதற்காக அவசர நடவடிக்கையொன்றை எடுக்க நேர்ந்தது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகள் புலனாய்வு பிரிவினை களைத்துவிட்டு இலங்கையின் சிறைச்சாலை வரலாற்றில் முதல்தடவையாக சட்ட அதிகாரங்களுடன் கூடிய பொலிஸ் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலைகள் புலனாய்வு பிரிவு 2010 இல் உருவாக்கப்பட்டது எனினும் அந்த பிரிவின் நடவடிக்கைகளிற்கு பொறுப்பேற்கும் எவரும் இருக்கவில்லை,அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் சில அதிகாரிகளின் தலையீட்டினால் மாற்றப்பட்டுள்ள இதற்கு அனுமதிக்க முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகள் சாதாரண மனிதர்களை கையாள்வது இல்லை என்பதால் அவர்கள் கடும் ஒழுக்க நெறிகளை பின்பற்றுபவர்களாகயிருக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.